கோலாலம்பூர்:

மலேசியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் பட்டு குகை முருகன் கோவில் உள்பட அந்த நாட்டின் பல இடங்களில் குண்டு வைத்துத் தாக்குதல் நடத்தி பொது அமைதியை சீர்குலைக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டது தெரிய வந்து மலேசியாவே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக மலேசிய உளவுப் பிரிவினர் இதை முன்கூட்டியே அறிந்து 3 பேரைக் கைது செய்து திட்டத்தை முறியடித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மலேசியா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மலேசியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாடே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த நிலையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது சீர்குலைவை ஏற்படுத்தும் வகையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது உளவுப் பிரிவுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அதிரடி ரெய்டு நடத்தி தாக்குதல் திட்டத்தில் ஈடுபட்டிருந்த 3 பேரை மலேசியப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பட்டு குகை முருகன் கோவில்
பட்டு குகை முருகன் கோவில், அங்குள்ள பிரமாண்ட முருகன் சிலை, காவல் நிலையங்கள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றை தீவிரவாதிகள் குறி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், வெடிகுண்டுகள், துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களை புகின் அமான் சிறப்பு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கோலாலம்பூர், செலாங்கூர், பஹாங் ஆகிய நகரங்களில் வைத்து கைது செய்துள்ளனர். ஒருவர் ஆகஸ்ட் 27ம் தேதியும், மற்ற இருவரும் ஆகஸ்ட் 29ம் தேதியும் கைதாகியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் ஐஜி காலித் அபுபக்கர் கூறுகையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியான முகம்மது வன்டி முகம்மது ஜெடி என்பவரிடமிருந்து வந்த உத்தரவுகளின் பேரில் இவர்கள் செயல்பட்டு வந்தனர். கைதான 3 பேரில் ஒருவருக்கு வயது 20 ஆகும். இவரை செலாங்கூரில் வைத்து ஆகஸ்ட் 27ம் தேதி கைது செய்தோம். அவரிடமிருந்து கையெறி குண்டுகள், பிஸ்டல், துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிரியாவுக்குத் தப்பத் திட்டம்
அவரைத் தொடர்ந்து மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆகஸ்ட் 29ம் தேதி இருவரையும் கைது செய்தோம். இவர்கள் தாக்குதலுக்குப் பின்னர் சிரியாவுக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர் என்றார் அவர்.
ஐஎஸ் தீவிரவாதிகளி பிற நாடுகளில் ஊடுருவதை போலவே மலேசியாவிலும் ஊடுறுவி வருகின்றனர். கடந்த மாதத் தொடக்கத்தில் 68 மலேசியர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரவுள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவர்களின் பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்தது மலேசிய அரசு.
மேலும் ஏற்கனவே ஐஎஸ் அமைப்பில் இணைந்து சிரியாவில் போரில் ஈடுபட்டு இதுவரை 26 மலேசியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்த நாட்டு அரசு கூறுகிறது. இவர்களில் சிலர் தற்கொலைப் படைத் தீவிரவாதிகளாக செயல்பட்டுள்ளனரர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது புகழ் பெற்ற பட்டுக் குகை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்குத் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Patrikai.com official YouTube Channel