புதுடெல்லி:
இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களின் கோட்பாடுகளுக்கு ஆதரவாக முஸ்லிம்களுக்கான வட்டியில்லா தனி வங்கி தொடங்க ஆலோசனை செய்து வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
வட்டி வாங்குவதும் வட்டிக்குக் கொடுப்பதும் பெரிய பாவம் என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கும் இஸ்லாமியர்கள், அதற்கான வட்டியை கட்டும்போது, மத கோட்பாடுக்கு எதிரான செயலை செய்வதாக மனம் வெதும்புகிறார்கள். அவர்கள் எண்ணத்திற்கு மதிப்பு அளித்து இஸ்லாமியர் களுக்காக வட்டியில்லா வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது.
தற்போது ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டவுடன் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, “இஸ்லாமிய வங்கி”களைத் தொடங்க முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டது. வளைகுடா நாடுகளிலிருந்து சுமார் ஒரு டிரில்லியன் டாலர் அளவிற்கான முதலீடுகளைக் கவரும் நோக்கத்தில் இஸ்லாமிய வங்கிகளை அறிமுகப்படுத்துவதாக அப்போது அறிவித்தது.
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள ‘ஹாங்காங் ஷாங்காய் பாங்கிங் கார்பரேஷன்’ (HSBC) மற்றும் ‘ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி’ (Standard & Chartered Bank) ஆகியவை, இஸ்லாமிய வங்கிச் சாளரங்கள் (Exclusive Windows for Islamic Banking) ஏற்படுத்தி உள்ளன.
கடந்த 2008-ஆம் ஆண்டில், நமது நாட்டின் நிதித் துறையில் ஏற்படுத்தவேண்டிய சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை ஆராய்வதற்காகத் திட்டக் கமிஷன் அமர்த்திய “ரகுராம் ராஜன் கமிட்டி”, இஸ்லாமிய வங்கிமுறையில் உள்ள சில கொள்கைகளைப் பரிந்துரை செய்துள்ளது.
ஏற்கனவே, 2015-16 ஆம் ஆண்டு அறிக்கையிலேயே ரிசர்வ் வங்கி இது குறித்து தெரிவித்திருந்தது. ஜெட்டாவை தலைமையிடமாகக் கொண்ட இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி, இந்தியாவில் தனது முதல் கிளையை அகமதாபாத்தில் தொடங்க முற்பட்டபோது, அரசியல் கட்சிகள், மத உணர்வாளர்கள், மற்றும் சமுக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.