முன்னாள் தலைமை செயலாளரும், மின் வாரிய தலைவருமான ஞானதேசிகன் திடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியலில் மட்டுமல்லாது தமிழக அரசிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோல தமிழக முன்னாள் மின்துறை அமைச்சர்மீதும் நடவடிக்கை பாயுமா என தமிழக மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஞானதேசிகன். தலைமை செயலாளர் பதவியில் இருந்து கடந்த ஜூன் மாதம் டிட்கோ தலைவராக மாற்றப்பட்டார்.
ஏற்கனவே இரண்டுமுறை மின் வாரிய தலைவராக பதவி வகித்த ஞானதேசிகன் அதிமுக அரசுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் திடீரென, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டது குறித்து மின் வாரியத்தில் கிசு..கிசு.. பரவி வருகிறது. இந்த விசயத்தில் ஞானதேசிகன் பலிகடா ஆக்கப்படுவாரா? என்பது கேள்விகுறியாகி உள்ளது.
தமிழகம் மின்மிகை மாநிலம் என மார்த்தட்டிக்கொள்ளும் தமிழக அரசு, ஏற்கனவே, தமிழக மின் வாரியத்திற்கு, தனியாரிடம் மின் கொள்முதலில் ஊழல் நடைபெற்று இருப்பதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பலவிதமான யூகங்களையும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் உருவாக்கி உள்ளது.
ஞானதேசிகன் தமிழ்நாடு மின்வாரிய தலைவராக இருந்தபோது தான், 11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 3,330 மெகாவாட் மின்சாரத்தை, ஒரு யூனிட், 4.91 ரூபாய்க்கு வாங்க, 2013 அக்டோபர் மாதம், மின் வாரியம் ஒப்பந்தம் செய்தது. இதற்கு, உடனடியாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வாங்கவில்லை.
2014 லோக்சபா தேர்தலின் போது , தமிழக மின் வாரியம், கேரளாவில் உள்ள என்.டி.பி.சி., எனப்படும், தேசிய அனல்மின் கழகத்திடம் இருந்து, மின்சாரம் வாங்கியது. அதனுடன் நேரடியாக ஒப்பந்தம் செய்யாமல், கேரளா மாநில மின் வாரியத்திடம் ஒப்பந்தம் செய்ததால், ஒரு யூனிட், 10 ரூபாய்க்கு வாங்க வேண்டிய மின்சாரத்திற்கு, மின் வாரியம், 16 ரூபாய் கொடுத்தது. இதனால் மின் வாரியத்திற்கு, 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்களான ஜி.எம்.ஆர்., மதுரை பவர், சமல்பட்டி, பிள்ளை பெருமாள் நல்லுார் ஆகிய நிறுவனங்களிடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாம் 12 ரூபாய்க்கு மேல் வாங்கியதால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
சர்வதேச சந்தையில், ஒரு டன் நிலக்கரி விலை 3,600 ரூபாய் என்றளவில் இருந்தபோது, 2014 டிச., வரை, மின் வாரியம், 5,400 ரூபாய்க்கு வாங்கியதால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
அவை அனைத்துக்கும் காரணம் அப்போது மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன்தான் காரணம் என்று தமிழக அரசியல் கட்சிகள் கூறி வந்தன.
ஆனால், தற்போது, தமிழகஅரசு ஞானதேசிகன் மீது நடவடிக்கை எடுத்து தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தப்படுமா? அவர் பலிகடா ஆக்கப்படுவாரா? அல்லது குளத்தில் போட்ட கல்லாக இருந்துவிடுமா என்பது போக போகத்தான் தெரியும். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு இதன்மூலம் உறுதியாகிறது. இதற்கு காரணமாக இருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் மீது நடவடிக்கை பாயுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொறுந்திருந்துதான் பார்க்கவேண்டும்.