நெட்டிசன் பகுதி:
SciNirosh அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து..
1
நாம் இருக்கும் இந்த பிஸியான உலகில் stress எனப்படும் மன அழுத்தம் எங்கள் வாழ்வில் சாதாரணமான ஒரு விஷயம் ஆகிவிட்டது. கடன், வேலையின்மை, குடும்பத்தில் பிரச்சினைகள், பள்ளியில் பரீட்சை போன்றவற்றை நமக்கு மன அழுத்தத்தைத் தருகின்றது. ஆனால், இந்த மன அழுத்தம் நம்மையும் நமது உடலையும் பயங்கரமாகப் பாதிக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏன்… இதனால் நமது உயிருக்கே ஆபத்து இருக்கின்றது என்று சொன்னால் நம்புவீர்களா?
உயிரியல் ரீதியாக மன அழுத்தம் சில வேளைகளில் மிகவும் உபயோகமாக இருக்கும். நீங்கள் ஒரு காட்டில் நடந்து செல்லும் போது ஒரு கரடி உங்களைத் தாக்கினால், உங்கள் உடல் ஒரு விதமான அழுத்த நிலையை அடைந்துவிடும். உங்கள் இருதயம் வேகமாகத் துடித்து, தசைகள் இறுகி அந்த இடத்தை விட்டு உடனடியாக போவதற்கு உங்கள் உடல் தயாராகிவிடும்! எனவே, இப்படி ஒரு ஆபத்தான நேரங்களில் மன அழுத்தம் நமது உயிரைக் காப்பாற்றுகிறது.
ஆனால், இதே மன அழுத்தம் தினமும் நமது வாழ்க்கையில் வந்துகொண்டே இருந்தால், அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஜப்பானில் இதற்குக் கரோஷி (Karoshi) என்று கூட பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் நேரடி மொழிபெயர்ப்பு „அதிக வேலைப்பளு மரணம்“ ஆகும். மிகவும் ஆரோக்கியமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள் திடீரென்று மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நோய்கள் காரணமாக இறந்து விடுகிறார்கள். இதை அவதானித்தவர்கள் இந்த நோய்களுக்கும் மன அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கின்றது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
சரி, மன அழுத்தம் இருக்கும் போது உண்மையில் நமது உடலில் என்ன தான் நடக்கிறது என்பதைப் பார்ப்போமா? பொதுவாக கோர்ட்டிசோல் (Cortisol) எனப்படும் இயக்குநீர் (hormon) தான் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி உடலின் எந்த உறுப்புகளுக்குச் சக்தி தேவையோ அந்த இடங்களுக்குச் சக்தியை அனுப்ப உதவுகிறது. ஆனால், மன அழுத்தம் தொடர்ந்திருந்தால் அதனால் பல பிரச்சினைகள் ஆரம்பித்துவிடும். மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு முற்றிலும் தனது பணியை நிறுத்திவிடும், அத்துடன் வெண்குறுதியணுக்களின் (white blood cells) எண்ணிக்கை குறைந்துவிடும், மேலும் நோய்கள் வருவதன் வாய்ப்பு அதிகரித்துவிடும். ஏன், புற்றுநோய் வருவதற்குக் கூட வாய்ப்புகள் இருக்கின்றது என்று கூறப்படுகிறது.
அது மட்டும் இல்லை, நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு உயிரணுவிலும் அடங்கி இருக்கும் ஒவ்வொரு நிறப்புரியின் (chromosome) நுனியிலும் டெலோமீர்ஸ் (telomeres) எனப்படும் ஒரு பகுதி இணைந்திருக்கிறது. இந்த டெலோமீர்ஸின் அளவு, வயது போகப் போகக் குறைந்துகொண்டே போய் ஒரு கட்டத்தில் முற்றிலும் நீங்கி விடும். அத்துடன் அந்த உயிரணுவும் இறந்துவிடும். ஆகவே, அந்த டெலோமீர்ஸ் இல்லாமல் போகும்போது நாமும் இறந்து விடுகிறோம். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், மன அழுத்தத்திற்கும் இந்த டெலோமீர்ஸின் அளவு குறைவதற்கும் தொடர்பு இருக்கிறது. அழுத்தம் கூடக் கூட டெலோமீர்ஸின் அளவு குறைவதின் வேகமும் அதிகரித்து விடுகிறது. ஆகவே, மன அழுத்தத்தின் காரணத்தால் நாம் மரணத்தை நோக்கி வேகமாகச் செல்கிறோம்!
ஆனால், பயப்படாதீர்கள் நண்பர்களே! மன அழுத்தம் உருவாக்குவதற்கு ஒரு இயக்குநீர் இருக்கிறது என்றால், அதைக் குறைப்பதற்கும் ஒரு இயக்குநீர் இருக்கத் தானே வேண்டும்? ஆமா இருக்கிறது தான். அது வேறு ஒன்றுமே இல்லை, காதல், அன்பு, சந்தோஷம் போன்ற உணர்வுகளுக்குக் காரணமாக இருக்கும் ஒக்சிடோசின் (Oxytocin) எனும் இயக்குநீர் தான். எனவே, மன அழுத்தம் உள்ள நேரம் நீங்கள் உங்களுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள், அத்துடன் மன அழுத்தமும் குறைந்து நீண்ட காலம் உயிர் வாழலாம்.
mental stress