கேரளாவின் அட்டப்பாடி அணையை தடுத்து நிறுத்தவும்: பிரதமர் மோடிக்கு முதல் வர் ஜெயலலிதா கடிதம்
நதிநீர் ஒப்பந்தத்தை மீறி, சிறுவாணி அணையின் குறுக்கே அட்டப்பாடியில் அணைகட்ட திட்டமிட்டிருக்கும் கேரளாவின் முயற்சியை தடுக்கக்கோரி, பிரதரம் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளதாவது:
“சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டப்பாடியில் கேரள அரசு, 4.5 டி.எம்.சி., அளவு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், அணை கட்ட திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த, மத்திய சுற்றுச்சூழல் துறையின் வல்லுனர் குழு, தமிழக அரசின் கருத்தை கேட்காமல், தன்னிச்சையாக பரிந்துரை செய்துள்ளது; அதை திரும்பப் பெறும்படி, தாங்கள் உத்தரவிட வேண்டும்.
சிறுவாணி ஆறு, மாநிலங்களுக்கு இடையில் பாயும், காவிரி ஆற்றின் கிளை நதியாகும். எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மீறும் வகையில், ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை, கேரளா துவக்கக் கூடாது என, அறிவுறுத்த வேண்டும்; இதை வலியுறுத்தி, 2012 ஜூன், 21ம் தேதி, தங்களுக்கு கடிதம் எழுதினேன்.
இந்நிலையில், அட்டப்பாடி அணை திட்டம் தொடர்பாகவோ, அதுகுறித்து வல்லுனர் குழுவின், 96வது கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்றோ, மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசுக்கு
தெரியப்படுத்தவில்லை. ஆனால், இது தொடர்பாக தமிழக அரசுக்கு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில், பல முறை கடிதம் எழுதியதாகக் கூறுவது உண்மையல்ல.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக, கேரளா மற்றும் கர்நாடகா சார்பில், மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசும், சில விபரம் தொடர்பாக, மனு தாக்கல் செய்துள்ளது; இவ்வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், காவிரி மற்றும் அதன் துணை நதிகளில், எந்த பணியும் மேற்கொள்ளக் கூடாது.
எனவே, அட்டப்பாடியில் அணை கட்டுவ தற்கான, சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த அளித்த பரிந்துரையை, உடனே திரும்பப் பெற, மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீரை முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும்.
அதுவரை, காவிரி படுகையில், கேரளா மற்றும் கர்நாடகாவில், எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்கக் கூடாது என, தாங்கள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.