பால்சோர்:
ஒடிசா மாநிலத்தின் ரெயிலில் அடிபட்டு இறந்த பெண்ணை இடுப்பை ஒடித்து தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இறந்து போன தனது மனைவியின் உடலை 10 கி.மீ, தூரம் கணவர் தூக்கி சென்றதும், அவரோடு அவரது 12 வயது மகள் அழுது கொண்டே சென்றதும் வீடியோ காட்சியாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,
தற்போது ரெயிலில் அடிபட்டு இறந்து போன பெண்ணின், இடுப்பு எலும்பை உடைத்து ஊழியர்கள் தூக்கி சென்றது மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ நகரை சேர்ந்த சலமனி பாரிக்(76) என்ற மூதாட்டி ரயில் மோதி பலியானார். இதனையடுத்து அவரது உடல் அங்குள்ள சமுதாய நல கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஊரில் போஸ்ட்மார்டம் செய்யவோ, ஆம்புலன்சு வசதிகளோ கிடையாது.
இதன் காரணமாக இறந்தவரின் உடல் 30 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மருத்துவமனைக்கு ரெயில் மூலம் எடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டது.
சோரா நகரத்திலிருந்து ரெயில் நிலையம் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆகவே இறந்தவரின் உடலை எடுத்து செல்ல ஆட்டோ ரிக்ஷாவை ஏற்பாடு செய்ய போலீசார் முயன்றனர். ஆட்டோ ஓட்டுனர் அதிக கூலி கேட்டதால், அங்கு வேலை செய்யும் இரண்டு ரெயில்வே துப்புரவு தொழிலாளர்கள் மூலம் உடல் ரயில் நிலையத்திற்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இறந்தவரின் உடலை தூக்க சிரமப்பட்ட ரெயில்வே துப்புறவு ஊழியர்கள், இறந்தவரின் உடலை மடக்க ஏதுவாக, அவரது இடுப்பு பகுதியை காலால் மிதித்து, இடுப்பு எலும்பை முறித்து, உடலை வளைத்து மூட்டையாக கட்டினர்.
பின்னர் அந்த மூட்டையை ஒரு கம்பில் வைத்து, இரு ஊழியர்களும் சேர்ந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள ரயில் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
இதை பார்த்த பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இதுகுறித்து, இறந்த பெண்மணியின் மகன் ரபீந்திர பாரிக் கூறுகையில், “எனது தாயாரின் உடலை உடைத்து எடுத்து சென்றனர். நான் எதுவும் செய்ய இயலாமல் தவித்தேன். இவர்களுக்கு கடவுள்தான் தண்டனை கொடுக்க வேண்டும்” என கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை எனக்கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தருமாறு, பாலசோர் மாவட்ட நிர்வாகத்திற்கும், ரெயில்வே போலீசாருக்கும் ஒடிசா மாநில மனித உரிமைகள் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.