“நடிகர்களை நம்பி பாரதிய ஜனதா கட்சி இல்லை: நடிகர்களால் கட்சி வளராது: என்று அக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக சட்ட பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சியின் அடிப்படை அஸ்திவாரத்தை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் தேர்தல் மாளிகை எழுப்புவோம்.
234 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். தேர்தல் அறிக்கை தயாரித்தல், விளம்பரங்கள் உருவாக்குதல் போன்ற பணிகள் உட்பட 38 பிரிவுகளாக பணிகளை பிரித்து செய்கிறோம்.
தமிழக பா.ஜ.க.வில் ஏற்கனவே 9 லட்சம் பேர் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் பாஜகவால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘மிஸ்டு’ கால் திட்டத்தின் மூலம் 51 லட்சம் பேர் புதிதாக இணைந்திருக்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது. இதில் இருந்து அதிகாரபூர்மாக ம.தி.மு.க. மட்டுமே வெளியேறி உள்ளது. மற்ற கட்சிகள் திராவிட கட்சிகளை மட்டுமே எதிர்த்து வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க. தொடர்ந்து திராவிட கட்சிகளை எதிர்த்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டாத திராவிட கட்சிகளை அகற்றுவதில் பா.ஜ.க.வுக்கும் பொறுப்பு உள்ளது.
அதே கடமை, பாஜக கூட்டணிக் கட்சிகளான தே.மு.தி.க, பா.ம.க, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இருக்கிறது. இதை அந்தந்த கட்சியின் தலைவர்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். எனவே, இந்த கூட்டணி, , வரக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெரும்.
மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசு முறையான ஒத்துழைப்பு தருவதில்லை. வரக்கூடிய தேர்தலில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வரும். அப்போது மத்திய அரசு திட்டங்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்.
காங்கிரஸ் கட்சி நடிகைகள் நக்மா, குஷ்புவை தேர்தல் பிரசாரத்தில் இறக்கி இருக்கிறது. மற்ற பல கட்சிகளிலும் சினிமா நட்சத்திர பேச்சாளர்கள் இருக்கிறார்கள். சினிமா நட்சத்திரங்களை எப்போதும் நான் குறைத்து மதிப்பிட்டது இல்லை. அதற்காக அதிகமாகவும் மதிப்பிட மாட்டேன்.
நடிகர்கள் பிரசாரத்துக்கு பலம் சேர்க்கிறார்கள். அறிமுகத்துக்கு தேவையாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி அவர்களால் தான் கட்சி வளர்கிறது என்று சொல்ல முடியாது. நடிகர், நடிகைகளை நம்பி பா.ஜ.க. இல்லை” என்று தமிழிசை பேசினார்.
“திராவிட கட்சிகளை தே.மு.தி.க. எதிர்க்கிறது என்கிற தமிழிசை, தே.மு.தி.கவும் தனது பெயரில் திராவிடத்தை வைத்திருக்கிறது என்பதை மறந்துவிட்டாரோ? தவிர 50 லட்சத்துக்கு மேல் உறுப்பினர்கள் உள்ள கட்சி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகள் எவ்வளவு? நடிகர்களை பாஜக எதிர்பார்க்கவில்லை என்பதுபோல் பேசுகிறார்.ஆனால் அந்தகால சத்ருகன்சின்ஹா முதற்கொண்டு பல நட்சத்திரங்கள் பாஜகவில் உண்டே. தவிர கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதுகூட தமிழக நடிகர் விஜய், மோடியை சந்தித்தார். பிறகு நடிகர் ரஜினியை வீடு தேடி வந்து மோடி சந்தித்தாரே.! பாஜகவில் இருக்கும் ஹேமமாலினி,கிர்ரோன் கெர், ஸ்மிரிதி ராணி ஆகியோர் நடிகர்கள் இல்லையா ” என்றெல்லாம் அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.