சென்னை:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.பி.எல். கிரிக்கெட் மேட்ச் இன்று மாலை ஆரம்பமாகிறது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை இதற்கான விழா நடைபெறுகிறது.
கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக பதவி இழந்த இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்,தமிழ்நாடு பிரிமியர் லீக் எனப்படும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்துகிறார்.
இந்த போட்டி இன்று தொடங்கி செப்டம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. டிபிஎல் போட்டி சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டில் மேலும் 3 இடங்களில் நடைபெற இருக்கிறது.
சென்னை சேப்பாக்கம், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி (திண்டுக்கல்), நெல்லை ஐ.சி.எல். மைதானம் ஆகிய இடங்களில் போட்டி நடைபெற இருக்கிறது. மொத்தம் 28 ‘லீக்’ ஆட்டம், இரண்டு அரை இறுதி, இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 31 ஆட்டம் நடைபெறும்.
இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (தென்சென்னை), தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (தூத்துக்குடி), ரூபி காஞ்சி வாரியர்ஸ் (காஞ்சீபுரம்), வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் (திருவள்ளூர்), மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் (மதுரை), திண்டுக்கல் டிராகன்ஸ் (திண்டுக்கல்), லைகா கோவை கிங்ஸ் (கோவை), காரைக்குடி காளை (காரைக்குடி) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்டு ராபின் முறையில் மோத வேண்டும். ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
முதல் அரைஇறுதி செப்டம்பர் 16-ந்தேதி நெல்லையிலும், 2-வது அரை இறுதி 17-ந்தேதி சென்னையிலும் இறுதிப்போட்டி 18-ந்தேதி சென்னையிலும் நடக்கிறது.
ஒவ்வொரு அணியுடனும் இந்திய கிரிக்கெட் வீரர்களான தமிழகத்தை சேர்ந்தவர்களும் விளையாடுகிறார்கள்.
ஆர்.அஸ்வின் திண்டுக்கல் அணியிலும், பத்ரிநாத் காரைக்குடி அணியிலும், முரளிவிஜய் கோவை அணியிலும், தினேஷ் கார்த்திக், எல்.பாலாஜி ஆகிய இருவரும் தூத்துக்குடி அணியிலும் சேர்ந்து விளையாடுகிறார்கள்.
இன்றைய தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைய போட்டியில் , சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
இந்திய முன்னாள் வீரரான ஹேமங் பதானி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிஎல் தொடக்க விழா, சினிமா நடிகர் நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் மாலை 5.45 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க விழா நிகழ்ச்சி 45 நிமிட நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.