சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு அகாடமி அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபை இன்றைய கூட்டத்தில்  விதி 110ன் கீழ் முதல்வர் பேசியது வருமாறு:
மாணாக்கர்களின் பன்முக வளர்ச்சிக்கு விளையாட்டு ஒரு காரணியாக உள்ளதால், கல்விக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் எனது தலைமையிலான அரசு அளித்து வருகிறது.
சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில், பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்தல்; பன்னாட்டு தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல்; உள் விளையாட்டு அரங்கங்களை அமைத்தல்; மாவட்ட விளையாட்டு வளாகங்களை அமைத்தல்; தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையினை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
விளையாட்டு மேம்பாட்டிற்காக இந்த ஆண்டு செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
INDIA-ASIA-TSUNAMI-ANNIVERSARY

  • எங்களது தேர்தல் அறிக்கையில் கடல் நீர் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும் என நாங்கள் தெரிவித்துள்ளோம். அதனை செயல்படுத்தும் வகையில், உலகில் இரண்டாவது மிக நீண்ட கடற்கரையான மெரினாவில் ‘பாய்மரப் படகு அகாடமி’ ஒன்று நிறுவப்படும். மேலும், ‘பாய்மரப் படகு மற்றும் துடுப்பு படகு போட்டிகளுக்கான திறன்மிகு பயிற்சி மையம்’ ஒன்றும் ஏற்படுத்தப்படும். இந்த அகாடமி மற்றும் திறன்மிகு பயிற்சி மையம் 7 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
  • எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் விளையாட்டு தொடர்பான பயிற்சிகள், நுணுக்கங்கள் மற்றும் ஆராய்ச்சிகளில் பயன்பெற ஏதுவாக மின்நூலகம் ஒன்று 2 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் தேசிய மாணவர் படைக்கென தனியாக எந்த விதமான பயிற்சி நிலையமும், இல்லை என்பதை கருத்தில் கொண்டு தேசிய மாணவர் படைக்கென தனியாக பயிற்சி அகாடமி ஒன்று 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று நான் பேரவையில் அறிவித்தபடி மதுரை இடையாபட்டியில் தேசிய மாணவர் பயிற்சி அகாடமி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளன. இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் தேசிய மாணவர் படை வீரர்கள் மலையேறும் பயிற்சியில் தங்களை செழுமைப்படுத்திக்கொள்ள ஏதுவாக மலையேறும் பயிற்சிக்கான செயற்கை மாதிரி வடிவமைப்பு ஒன்று 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
    இவ்வாறு  ஜெயலலிதா  கூறினார்.