சென்னை:
மிழக பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு  தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேற்றுசட்டப்பேரவையில் நடைபெற்ற செய்திதுறை மானிய கோரிக்கையின்போது, பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்த எந்த அறிவிப்புகளையும் வெளியிடாதது, தமிழக பத்திரிகையாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பல்வேறு துறைகளில் தமிழகத்தை இந்தியாவின் முதன்மையான மாநிலமாக மாற்றிட தொலைநோக்குடன் பல திட்டங்களை தீட்டி செயலாற்றிடும் முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர்களின் கீழ்காணும் கோரிக்கைகளை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றிட உரிய அறிவிப்புகளை விதிஎண் 110ன் கீழ் வெளியிடுவார் என நம்புகிறோம்.
கோரிக்கைகள் விபரம் வருமாறு:

  • தமிழ்நாட்டில் செய்தியாளர்களின் பணி மற்றும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய தனிச்சட்டம் கொண்டு வருவதோடு தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் உருவாக்க வேண்டும்.
  • பத்திரிகையாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் என்பது ரூ.20 ஆயிரமாக வழங்கவும், சம்பளகமிஷன் பரிந்துரைகளை செய்திட, ஊடக நிறுவனங்கள் அமலாக்கிட உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
  • 200 பத்திரிகையாளர்கள் தங்களது சொந்த பணத்தில் 2007ல் சென்னை தாம்பரம் அருகே படப்பையில் வாங்கிய  12 ஏக்கர் அனுபவபாத்திய நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.
  • ஆந்திர மாநில அரசு அமல்படுத்தியுள்ள பத்திரிகையாளர் குடும்ப உறுப்பினர் அனைவருக்குமான விரிவு செய்யப்பட்ட மருத்துவகாப்பீட்டு திட்டம் போல் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். செய்தியாளர் ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
  • ஊடகத்துறையில் பணிசெய்பவர்களுக்கு தனிநலவாரியம் அமைக்கவேண்டும்.
  • ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகளை முற்றிலும் நீக்க வேண்டும்.
  • பணியின்போது மரணம் அடையும் செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். விண்ணப்பிக்கும் அனைத்து செய்தியாளருக்கும் வீட்டுவசதி வாரியத்தின் கீழ் வாடகைக்கு குடியிருப்பு ஒதுக்கி தரவேண்டும்.
  • ஏழ்மை நிலையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு இலவசகமாக வீட்டுமனை ஒதுக்கி, பசுமை வீடு திட்டத்தின்கீழ் வீடு கட்டித்தர வேண்டும்.
  • தமிழகத்திலுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஆந்திர அரசு வழங்கி வருவது போல அரசு பஸ்களில் பயனிக்க இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும்.
  • தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் ஏழை பத்திரிகையாளர்கள் குழந்தைகளுக்கு  5 விழுக்காடு ஒதுக்க வேண்டும்.
  • மகாகவி பாரதியார் பிறந்தநாளை  பத்திரிகையாளர் தினமாக அறிவித்து ஆண்டுதோறும் பாரதியார் பெயரில் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்க வேண்டும்.
  • சென்னை புறநகர் பகுதியான ஆவடி வீராபுரத்தில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பிலிருந்து பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் இணைந்து போராடி மீட்ட 60 ஏக்கர் அரசு நிலத்தில் மகாகவி பாரதியார் பெயரில் கீழ்வருவாய் பிரிவு, மத்திய வருவாய் பிரிவு, உயர் வருவாய் பிரிவு ஆகியோர் ஒருங்கிணைந்து குடியிருப்புகளை உருவாக்கி குறைந்த விலையில் மாததவணையில் வழங்க கோருகிறோம்.
  • கடும் நோயால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெற நலநிதிய விதியை மாற்ற வேண்டும்.
  • செய்தி மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றும்பத்திரிகையாளர்கள் அல்லாத (Non Journalists) ஊழியர்களுக்கு பணிபாதுகாப்பு மற்றும் சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமலாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தமிழக முதல்வரை தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது