இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உயிர்களுக்கு உத்தரவாதமில்லை என அமெரிக்க பத்திரிகையாளர் பாதுகாப்பு இயக்கம் (சிபிஜே) தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் செல்வாக்குமிக்க மிக்க உள்ளூர் அரசியல்வாதிகளின் குற்றங்களைப் பின்தொடரும் பத்திரிக்கையாளர்களின் உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்று அமெரிக்காவிலிருந்து செயல்படும் “பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு இயக்கம் (சிபிஜே – Committee to Protect Journalists“) என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவில் ஊழலைப் பற்றி எழுதும் நிருபர்கள் தங்கள் உயிரைப் பறிகொடுக்க நேரலாம் என்றும், ஆபத்தை பின்தொடர்ந்து செல்கிறார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறி உள்ளது. இந்தியாவின் பத்திரிக்கை சுதந்திரம் பற்றி கடுமையாக சாடியுள்ளது.
ஏற்கனவே 2011-ம் ஆண்டு, அரசியல்வாதியின் மகன் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்து எழுதிய உமேஷ் ரஜ்புத் என்ற பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடுத்து, ஜூன் 2015-ல் உ.பி மாநிலம் ஆளும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நில அபகரிப்பு மற்றும் கற்பழிப்பு போன்ற செயல்களை ஈடுபட்டதைக் கண்டறிந்து எழுதிய ஜகேந்திரசிங் என்ற பத்திரிகையாளர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.
அதே ஆண்டு பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பில் 1 பில்லியன் அளவுக்கு முறைகேடு நடந்ததாக எழுதிய புலனாய்வு நிருபர் அக்ஷய்சிங் மர்மமான முறை யில் கொல்லப்பட்டார்.
இதுபோன்ற நிகழ்வுகளை மேற்கோள்காட்டி விரிவான அறிக்கை வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து, இந்திய அரசுக்கும், உத்திரபிரதேச அரசுக்கும், சிபிஐக்கும் இதுபற்றி நேர்மையான விசாரணை நடத்துமாறு கோரிக்கை விட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக இந்திய அரசு அதிகாரிகளை சந்திக்கவும் சிபிஜே சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.