சென்னை:
தமிழக அரசு தகவல்களை பேஸ்புக் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழக அரசின் செய்தித்துறை இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழக அரசின் செய்திகள், தமிழக முதல்வரின் அறிவிப்புகள், அரசின் சாதனைகள், மக்கள் நலத்துறை திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகள், புகைப்படங்கள், விடியோ துண்டுப் படங்கள் ஆகியவற்றை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு இமெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் அனுப்பி வருகிறது.
இனிமேல் அரசின் அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் பற்றி பொதுமக்களும் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தெரியப்படுத்த முடிவு எடுத்துள்ளதாக செய்தித்துறை தெரிவிக்கிறது.
இதற்காக TN DIPR என்னும் முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக அரசின் ஆக்கப்பூர்வமான பணிகளையும் முதல்வரின் அறிவிப்புகளையும் மக்களிடையே எடுத்துச் செல்லும் பணியினை செய்தி மக்கள் தொடர்புத் துறை மேற்கொண்டு வருகிறது.