ஒலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் சிந்து வெள்ளி வென்றதை நாம் போற்றிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். பலகோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு பலரும் அன்பளிப்பு அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
“குடியிருக்க விடுதி மறுக்கப்பட்டு, அதன் காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் ஒரு விளையாட்டு வீராங்கனை.
தனது தற்கொலைக்கான காரணம் குறித்து இந்தியப் பிரதமர் மோடிக்கும் “மரண வாக்குமூலத்தை” எழுதியிருக்கிறார்.
பாட்டியாலாவைச் சார்ந்த, தேசிய கைப்பந்து விளையாட்டு வீராங்கனை பூஜா . வயது 20. இவர் பி. ஏ இரண்டாம் ஆண்டு மாணவி.
இவர் படித்துவந்த கல்லூரியில் இலவச தங்குமிடம் மறுக்கப்பட்டு,
தினமும் கல்லூரிக்கு வந்துபோகச்சொல்லி கல்லூரி நிர்வாகம் கட்டளையிட்டிருக்கிறது.
அதற்கு பூஜா, “என் தந்தை வசதியில்லாதவர். தினமும் காய்கறி விற்றுதான் என்னைப் படிக்க வைக்கிறார். நான் தினமும் பேருந்தில் வந்து செல்வதானால் மாதம் ரூ.3,750/= வரை செலவாகும். அதை என் குடும்பம் தாங்காது” என்று கூறியுள்ளார்.
ஆனால் கல்லூரி நிர்வாகம், தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. பூஜாவை, விடுதியை விட்டு வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்” என்பதுதான் சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்தி.
ஆனால், “உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பூஜா குமாரி டிரிபிள் ஜம்ப் வீராங்கனை . இவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) அகாடமியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்த அகடமியில் கிரிக்கெட் மைதானத்துக்குப் பின்புறம், மழை நீரை சேமிக்கும் குளம் உண்டு. அங்கு பூஜா குமாரி சென்றிருக்கிறார். அப்போது குளத்தில் அருகில் நின்று தனது போனில் செல்பி எடுத்துக்கொள்ள முயன்றார். அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக குளத்தில் வழுக்கி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மரணமடைந்தார். இந்த சம்பவம் நடந்தது கடந்த ஜூலை 31ம் தேதி. இதைத்தான் சமீபத்தில் நடந்த சம்பவம் போல சமூகவலைதளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள்” என்று சொல்லப்படுகிறது.