சாந்தியை நினைவிருக்கிறதா?
இன்று சிந்துவை இந்தியாவே கொண்டாடுவதுபோல, கடந்த 2006ம் ஆண்டு சாந்தியை கொண்டாடியது தமிழகம். அந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றார் தமிழக சாந்தி.
வழக்கம்போலவே தமிழக அல்லது தென்னிந்திய வீராங்கனை என்பதால் வட இந்திய ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தமிழகம் புதுக்கோட்டையைச் சாந்தியை கொண்டாடியது. உச்சி முகர்ந்தது.
ஆனால் பாலின சர்ச்சையால் அவரது வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்திய தடகளக் கூட்டமைப்பால் தடை கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ராக்கி அனுப்பிய சாந்தி, மிக வருத்தத்துடன் கடிதமும் அனுப்பியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், தனக்கு நடத்தப்பட்ட பாலின சோதனை நடத்தப்பட்ட விதம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் சாந்தி. அதோடு, , தன்னை போலவே ஹார்மோன் சோதனைகளுக்கு ஆளான தடகள வீராங்கனை டூட்டி சந்தின் வழக்கில் சர்வதேச விளையாட்டுகளுக்கான மத்தியஸ்த நீதிமன்றம் அந்த சோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம் செய்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
(டூட்டி சந்தின், 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஏழாவது இடத்தை பிடித்தார்.)
மேலும், ”இந்திய நாடு என்னை மறந்து விட்டது என்று எண்ணுகிறேன். விரைவில் தன்னுடைய பதக்கத்தை மீட்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும், ” என்று வருத்தத்துடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விளையாடுவதற்கான தடை விதிக்கப்படும் முன்பு சாந்தி சர்வதேச அளவில் 11 பதக்கங்களை பெற்றிருக்கிறார். தேசிய அளவில் 50 பதக்கங்களை அள்ளியிருக்கிறார். அதுமட்டுமல்ல.. அவர் பயிற்சி அளித்த 60 தடகள விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளனர்.
மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து, சாந்தியை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “வறிய குடும்பத்தைச் சேர்ந்த நான், விளையாட்டு ஆர்வத்தால் சானைகள் புரிந்தேன். என் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்தேன். ஆனால் தற்போது என்னை கண்டுகொள்வார் யாருமில்லை. எனக்கான வேலையும், அங்கீகாரமும் கொடுக்கபட்டால், விளையாட்டு துறையில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க துடிப்புடன் இருக்கிறேன். இதை பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன்” என்றவரால் அதற்கு மேல் பேசமுடியாமல் கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.
இந்தியாவே சிந்துவை உற்சாக கோசம் எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில் சாந்தியின் குரல் யாரை எட்டப்போகிறது?
- டி.வி.எஸ். சோமு