ரியோடிஜெனிரோ:
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் சாக்ஷி வெற்றி பெற்று வெண்கல பதக்கம் பெற்றார். இதன் காரணமாக இந்தியா முதன்முதலாக பதக்க பட்டியலில் இடம்பெற்றது.
சாக்ஷி நேற்று விளையாடிய போட்டியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டில் இருந்தபடியே டிவியில் பார்த்துக்கொண்டு இருந்தனர். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சாக்ஷி வெற்றி பெற்றது தெரிந்ததும் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். துள்ளிக்குதித்தும் உற்சாகத்தில் கூக்குரல் எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதன் காரணமாக அவர் வீடு இருந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. இந்த வெற்றியை அவரது குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து சாக்ஷியின் வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வருவதால் அந்த தெருவே விழாக் கோலம் பூண்டுள்ளது.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை “பிரீ ஸ்டைல்” பிரிவில் நடந்த ரெபிசாஜ் சுற்றில், இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெற்றி பெற்றார். மங்கோலிய வீராங்கனை ஒர்ஹான் புர்வித்ஜ் உடன் மோதிய இந்தப் போட்டியில் 12-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்ற சாக்க்ஷி மாலிக், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதிய சாக்ஷி மாலிக், அவரை தோற்கடித்து பதக்கத்தை தட்டி சென்றார்.
சாக்ஷி வெற்றி பெற்றதை டிவியில் பார்த்த் அவரது அம்மா சாக்ஷி டிவியிலேயே முத்தமழை பொழிந்தார்.
இது குறித்து, அவரது அம்மா சுதேஷ் மாலிக் கூறும்போது, எனது மகள் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுக்கொடுத்தது பெருமையாக இருக்கிறது என்றும், சாக்ஷி என் மகள் அல்ல, தேசத்தின் மகள் என்றும் கூறினார். இந்தியாவின் பதக்க தாகத்தை தங்கள் மகள் தீர்த்தது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
ரியோ ஒலிம்பிக் 2016ல் பதக்கம் வென்ற முதல் இந்திய ஒலிம்பியன் என்ற பெருமையும், ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற நான்காவது பெண்மணி என்ற பெருமையும் சாக்ஷி பெற்றுள்ளார்.
2002ல் இருந்து மல்யுத்தப் போட்டிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாக்க்ஷி கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். தோஹாவில் 2014ல் நடந்த ஆசிய போட்டிகளில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
12 நாட்களுக்கு பிறகே இந்தியா பதக்கப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.