கடலூர்:
“உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி 33 லட்சம் பணத்தை கொள்ளையடித்தேன்” என்று கொள்ளைக் கும்பல் தலைவரான கவுன்சிலர் “வாக்குமூலம்” அளித்துள்ளார்..
கடலூர் மாவட்டம் சித்தாலிக்குப்பத்தில் வசிப்பவர் வெங்கடாசலம் (வயது 75). என்.எல்.சி. நிறுவனத்தில் ஓய்வு பெற்ற இவர் தற்போது பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 6ஆம் தேதி இவரது வீட்டில் ஒரு கும்பல் புகுந்து 33 லட்சம் ரொக்கம் மற்றும் இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டது.
கடலூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி, சரவணன், புகழேந்தி, கண்ணன், நடராஜன் ஆகியோர் தலைமயில் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இதில் ஆளுர் அகரத்தைச் சேர்ந்த மாயவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில், சசிகுமார், மணிவேல், ராஜசேகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
வெங்கடாசலம் வீட்டில் 33 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்தோடு, கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டில் 65 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்தையும் இவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கொள்ளைக் கும்பலுக்கு தலைவர் போல் செயல்பட்ட மாயவேல் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றவர். “வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறேன். இப்போது அனைவரும் ஓட்டுக்கு அதிக ரூபாய் கொடுக்கிறார்கள். நானும் கொடுத்தால்தான் வெற்றி பெற முடியும். . அதற்காகத்தான் கொள்ளையடித்தேன் என்று கூறியிருக்கிறார்.