சென்னை:
24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள சிக்னலில் கழுத்து அறுபட்ட நிலையில் வாலிபர் உயிருக்கு போராடி , உயிரிழந்தார். பரபரப்பு மிகுந்த கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நடந்திருப்பதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு பஸ் நிலைய நுழைவுவாயில் எதிரே உள்ள சிக்னல் அருகே உள்ள சென்டர்மீடியன் பகுதியில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த பகுதியில் மக்கள் திரண்டதால் பரபரப்பு உருவானது.
போலீசார் அவரை மீட்டு, ரோட்டின் ஓரமாக வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டனர். சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரது கழுத்து சற்று நேரத்திற்கு முன்புதான் அறுக்கப்பட்டதுபோல் தெரிந்தது. உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. யாரோ அவரை அவரை கொலை செய்து, அங்கே போட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இறந்த வாலிபரின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இறந்த வாலிபரின் சட்டை பாக்கெட்டில் 20 ரூபாயும், கஞ்சா பொட்டலமும் இருந்தது. பேன்ட், சட்டை அணிந்துள்ளார்.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று விசாரிக்கின்றனர்.
24 மணி நேரமும் போக்குவரத்துடன் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு பஸ் நிலைய சிக்னலில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.