ரியோ:
ஒலிம்பிக் போட்டி நடக்க இருக்கும் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் சுடர் வந்தடைந்த போது, அதை எதிரத்து ஆர்ப்பாட்டக்காரர்கள், சுடரை அணைக்க முயன்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 6ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருக்கின்றன. நாளை, ரியோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் துவக்க விழா நடக்க இருக்கிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் சுடர் ஓட்டம், நகரின் வடக்கு பகுதியை கடந்துகொண்டிருந்தபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறித்தனர்.

“பிரேசில் நாட்டில் வறுமை சூழ்ந்திருக்கும் நிலையில், பெரும் செலவு செய்து ஓலிம்பிக் போட்டி நடத்த வேண்டுமா” என்று முழக்கமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், சுடரை அணைக்க முயன்றனர். இதையடுத்து காவல்துறையினர் கண்ணீர் புகையையும், மிளகு ஸ்ப்ரேயையும் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.
நாளை ஒலிம்பிக் போட்டியின் துவக்கவிழா நடக்க இருக்கும் நிலையில், போராட்டங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ரியோ நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, அந்நாட்டு அரசு செய்திருக்கிறது.
Patrikai.com official YouTube Channel