சென்னை:
மாணவி நவினா இறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என் ராமதாஸ் கோரிகக்கை விடுத்துள்ளார். மேலும் அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கயவன் ஒருவனை காதலிக்க மறுத்தற்காக உயிருடன் எரிக்கப்பட்டு, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த மாணவி நவீனா உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
தனது உயிரையே விலையாகக் கொடுக்கும் அளவுக்கு நவீனா செய்த குற்றம் என்ன? என்பதுதான் எனது மனதை குடைந்து கொண்டிருக்கும் வினா ஆகும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த அம்மாணவி நன்றாக படிக்கக் கூடியவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விவசாயப் பட்டப்படிப்பு படித்து விவசாயிகளுக்கு சேவை செய்வது தான் அவரது லட்சியமாக இருந்தது. இன்று அவரது உடலைப் போலவே அவரது கனவும் கருகிக் கிடக்கிறது. இப்படி நடக்கும் அளவுக்கு அந்த சிறுமி செய்த பாவம் என்ன?.
பள்ளிக்கூடத்திற்கு சிற்றுந்தில் சென்ற அம்மாணவியை ஒரு மிருகம் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை செய்திருக்கிறது. இதனால் அம்மாணவியின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்திற்கு பிறகு அம்மாணவி மீண்டும் பள்ளிக்கு செல்லத் தொடங்கிய சூழலில், அம்மாணவியின் குடும்பத்தினர் தனது கை, கால்களை வெட்டி விட்டதாக பொய் புகார் கொடுத்து குடும்பத்தினரின் நிம்மதியை குலைத்திருக்கிறது அந்த மிருகம்.
விரும்பாத பெண்ணையும் விரட்டி விரட்டி காதலிக்கும்படி தூண்டியவர்களில் தொடங்கி, கயவன் என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கி பேசியவர்கள் வரை அனைவருமே மாணவி நவீனாவின் கொலைக்கு காரணமானவர்கள்தான்.
இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் தடுக்க நவீனா கொலையின் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவி நவீனாவின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதுடன், நவீனா உயிர்நீத்த ஆகஸ்ட் 3 ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக தேசிய அளவில் கடைபிடிக்க மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
Patrikai.com official YouTube Channel