நியூஸ்பாண்ட்:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள பாராளுமன்ற மேலவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, தி.மு.க.வில் இணையலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுகவில் திடீரென மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டவர் சசிகலா புஷ்பா. பாராளுமன்ற மேலவை உறுப்பினரானதுடன், அதிமுக உறுப்பினர்களின் கொறடா ஆகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஆபாச பேச்சு, திருச்சி சிவாவுடன் நெருக்கமான படங்கள், கல்விச் சான்றிதல் மோசடி என பலவித சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கினார் சசிகலா புஷ்பா.
இதன் உச்சகட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று டில்லி ஏர்போர்ட்டில், தி.மு.க.வின் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் திருச்சி சிவாவை அறைந்தார்.
“அதிமுக ஆட்சி பற்றி திருச்சி சிவா கிண்டல் செய்ததால் அடித்தேன்” என்று விளக்கமும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று, சசிகலா புஷ்பாவை தனது போயஸ் இல்ல வீட்டுக்கு அழைத்து விசாரணை நடத்தினார்..
இதற்கிடையே இன்று ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மீது பரபரப்பு புகாரைக் கூறி அதிர வைத்திருக்கிறார்.
ஜெயலலிதா தன்னை அறைந்தார், சித்ரவதை செய்தார் ராஜினாமா செய்ய வலியுறுத்தினார் என்றெல்லாம் அடுக்கடுக்கான புகார்களை சொல்லி கதறினார் சசிகலா புஷ்பா.
“மிக மிக பணிவானவர்களின்” கட்சியான அ.தி.மு.க.வில் இப்படி, சசிகலா புஷ்பா கிளர்ந்தெழுந்தது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
“அதோடு, ச.புஷ்பாவின் இன்றைய பாராளுமன்ற பேச்சில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. ஜெயலலிதாவின் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டுக்களை சொன்னதோடு அவர் விட்டுவிடவில்லை.. மிகவும் பவ்யமாக, “திருச்சி சிவா எம்.பி. ரொம்பவும் நாகரீகமானவர்; சில நிமிடங்கள் உணர்ச்சிவசப்பட்டதால் நான் அவ்வாறு நடந்து கொண்டேன். இதற்காக திருச்சி சிவாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் திமுக தலைவர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
ஆக, ஜெயலலிதாவை இவர் தைரியமாக எதிர்ப்பதற்குக் காரணம் தி.மு.க.விலிருந்து இவருக்குக் கிடைத்திருக்கும் ஆதரவுதான். அதையடுத்தே ஜெ.வை விமர்சித்ததோடு, தி.மு.க. தலைவர்களிடம் பவ்யமாக மன்னிப்பும் கேட்டிருக்கிறார்” என்று சொல்லும் டில்லி பிரமுகர்கள் இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள்:
“தி.மு.க.வைச் சேர்ந்த பாராளுமன்ற மலேவை உறுப்பினரான கனிமொழி, கட்சி பேதமின்றி அனைவவருடன் நட்புடன் பழகும் குணம் உள்ளவர். அந்த வகையில், எதிர்க் கட்சி உறுப்பினராக இருந்தாலும் பாராளுமன்றத்தில் சந்தித்துக்கொள்ளும்போது சசிகலா புஷ்பாவுடன் சகஜமாக பேசுவார். இந்த வகையில் இருவருக்கும் ஏற்கெனவே நல்ல அறிமுகம் உண்டு.
நேற்று ஜெயலலிதா நடத்திய கடுமையான விசாரணையை எதிர்கொண்டு, வெளியில் வந்த சசிகலா புஷ்பா உடனடியாக தொடர்புகொண்டது கனிமொழியைத்தான்.
விசாரணை மிகக் கடுமையாக இருந்தது என்று சொல்லி அழுதிருக்கிறார். அவருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி, மீண்டும் தொடர்புகொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
இதன் பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் தகவல்களை தெரிவித்த கனிமொழி, சசிகலா புஷ்பா, திமு.கவுக்கு வருவதற்கான வாக்குறுதியை பெற்றிருக்கிறார்.
இதையடுத்து மீண்டும் சசிகலா புஷ்பாவை தொடர்புகொண்டு தைரியம் கொடுத்தார். இதையடுத்தே பாராளுமன்றத்தில் ஜெ. மீது ஆவேசத்துடன் புகார் கூறினார் ச.புஷ்பா” என்கிறார்கள்.
அதோடு, “மாற்று கட்சி பிரமுகர்களை தி.மு.க.வுக்கு இழுக்கும் வேலையை தொடந்து மு.க.ஸ்டாலின் மட்டும் செய்துகொண்டிருந்த நிலையில், இப்போது அவருக்கு சவால் விடும் வகையில் கனிமொழியும் இறங்கியிருக்கிறார்” என்றும் தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.