ஈரோடு:
வெளிநாட்டு மோகத்தால், அதிக சம்பளம்  என்ற  ஆசையால் , சரிவர விசாரிக்காமல் ஏஜெண்டு களை நம்பி வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களின்  நிலை  பரிதாபமாக கேள்விக்குறியாகி வருகிறது.
எத்தனையோபேர் இதுபோல் ஏமாந்து, துயரங்களுக்கு ஆளாகி இருந்தாலும், இன்னும் ஏமாறுபவர்கள் ஏமாறிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

கட்டிட வேலை செய்யும் கணேஷ்
கட்டிட வேலை செய்யும் கணேஷ்

வளைகுடாநாடுகளில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக நிறைய  நிறுவனங்கள்  மூடப்பட்டு வருகிறது.  சவூதி அரேபியாவில்  வேலை செய்து வந்த இந்திய தொழிலாளர்களை  வேலையை விட்டு நீக்கியதால் செய்வதறியாது, அடுத்த வேளை உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள்.   அங்கு அவதிப்படும் தொழிலாளர்களை மீட்க  அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தமிழ்நாட்டை சேர்ந்த என்ஜினியர் ஒருவர் சவுதியில் படும் அவலம் பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளது.
ஈரோடு அருகே உள்ள கோபிசெட்டிப்பபாளையம் வெள்ளாளர் பாளையம் பகுதியை சேர்ந்தவர். கணேஷ் சண்முகம். எலக்ட்ரிக்கல் என்ஜினீயரான இவர், தான் வேலைக்கு செல்லும் கம்பெனி பற்றி சரிவர விசாரிக்காமல் , ஏஜண்டுகளின் ஆசை வார்த்தையை நம்பி சென்றதால், ஏமாற்றப்பட்டு தற்போது கூலி தொழிலாளியாக சவுதியில் வேலை செய்து வருகிறார்.
இதுபற்றி வாட்ஸ்அப் மூலம் அவர் அனுப்பி உள்ள  தகவல்:
இந்த வருடம் (2016) பிப்ரவரி 23ந்தேதி சவுதிக்கு சென்றார் கணேஷ்.  இமேஜ் கேப்ஷன்  என்ற  பெரிய கம்பெனியில் எலக்ட்ரிக்கல் என்ஜினியர் வேலை என்றும் , முதலில் 2500 ரியால் (இந்திய மதிப்பு 45000 ரூபாய்) சம்பளம் கிடைக்கும்  என்ற ஆசை வார்த்தையில் மயங்கி, பணத்துக்கு ஆசைப்பட்டு வேலைக்கு சம்மதித்தார்.
ஆனால், அங்கு சென்றபிறகுதான் தெரிந்தது, தான் ஏமாற்றப்பட்டு  இருக்கிறோம் என்று. சௌதி அரேபியாவில் உள்ள  தம்மாமின் சாஃப்வா என்ற இடத்தில் வேலை என்றும், அங்கு என்ஜீனியர் வேலை கிடையாது என்றும், கட்டிடத்தில் கூலித் தொழிலாளியாகத்தான்  வேலை செய்ய வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார்.
அதேபோல் சம்பளமும் 2500 ரியால் கிடையாது என்றும் 1300 ரியால்தான் (இந்திய மதிப்பு 23000 ரூபாய்) சம்பளம் என்றும் கூறப்பட்டது.  அவரது பாஸ்போர்ட்டும்  வேலை செய்யும் நிறுவனதால் பறிமுதல் செய்யப்பட்டு  உள்ளது.
வெளிநாட்டில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் வேலை என்று நம்பி, அதற்காக தனது வீட்டையே அடமானம் வைத்து ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாய்ஏ ஜண்டிடம் கொடுத்துள்ளார்.
இவ்வளவு செலவு செய்து வந்துவிட்டோமே என்ன செய்வது என்று புரியாமல் தற்போது கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
தான் ஏமாற்றப்பட்டது குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு டுவிட்டர் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். ஆனால் எந்தவிதமான  பதிலும் வரவில்லை. அதனால் அவரது பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
soudi-1
கணேஷ்  அனுப்பியுள்ள தகவல், தான்  ஏமாற்றப்பட்டு உள்ளேன். நான் வந்த வேலை வேறு, தற்போது செய்யும் வேலை  வேறு.   கட்டிட தொழிலாளியாக ஒரு இடத்தில்   வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. தெரியாத வேலை என்பதால் என்னால் அந்த வேலையை செய்ய இயலவில்லை. இதனால்  தவறி விழுந்து என்னுடைய கால் முறிந்துவிட்டது. என்னுடைய ஆவணங்கள் அனைத்தும் நான் வேலை செய்யும் கம்பெனியால் பறிக்கப்பட்டுள்ளதால் என்னால் வெளியே போக முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இங்குள்ள  வாழ்க்கை நரகத்தை போன்று உள்ளது.  இங்கிருந்து   எப்படியாவது வீட்டுக்கு திரும்பி செல்ல விரும்புகிறேன்  என்று  கூறியுள்ளார்.
கணேஷின்  பெற்றோர்  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்களிடம் தனது மகனை நாடு திரும்ப ஆவன செய்யுமாறு மனு கொடுத்துள்ளனர்.