சென்னை:
திமுக உறுப்பினர்களின் தரக்குறைவான பேச்சு தொடர்ந்தால் விதிகளை பயன்படுத்தி தக்க நடவடிக்கை எடுப்பேன் என பேரவைத் தலைவர் தனபால் எச்சரித்தார்.
சட்டப்பேரவை விவாதத்தின்போது,  அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உறுப்பினர் தென்னரசு, ராஜன் செல்லப்பா ஆகியோரின் பேச்சுக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரியற்கு, பேரவை தலைவர் உடனே தீர்ப்பு வழங்காததை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து பேரவை தலைவர் தனபால் சபையில் பேசியதாவது:
stalin
‘நான் நாளை தீர்ப்பு கூறுகிறேன் என நேற்று கூறியிருந்தேன். இன்று (நேற்று) தீர்ப்பு கூற உள்ளேன். தீர்ப்பை இப்போதே கூற வேண்டும் என பேரவைத் தலைவரை நிர்பந்திப்பது முறையற்றது. பலமுறை இது போல் திமுக உறுப்பினர்கள் வேண்டும் என்றே அவையை நடத்த விடாமல் இடையூறு செய்கின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவருடன் என்னை சந்திக்க வந்த அன்பழகன், என்னை ஒருமையில் பேசினார். அதையும் பொறுத்துக் கொண்டேன். அவையில் திமுக உறுப்பினர் பொன்முடியும், ஒருமையில் ஏகவசனமாக பேசினார். அதே போல் அன்பழகன், ரங்கநாதன் இருவரும், தரக்குறைவாக அமைச்சர்கள், உறுப்பினர்களை கேலி, கிண்டல் செய்வதுடன் சைகையும் காட்டுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நான் அவையை பொறுமையாக நடத்தி வருகிறேன். நான் பேரவைத்தலைவராக பொறுப்பேற்றபோது முதல்வர், ‘தராசுபோல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்’ என்றார். அதை சிரமேற்கொண்டு பணியாற்றி வருகிறேன். அவையின் விதிகள் அடிப்படையில் தான் செயல்பட்டு வருகிறேன்.
சட்டப்பேரவையில் திமுக தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் மற்ற உறுப்பினர்களை தூண்டி விடுகின்றனர். என்னை நிர்பந்திக்க யாருக்கும் உரிமை இல்லை. திமுகவினரின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களுக்கு கடும் கண்டணம் தெரிவித்துக் கொள்கிறேன். இது போல் இனிமேலும் தொடர்ந்தால் விதிகளை பயன்படுத்தி தக்க நடவடிக்கை எடுத்து, மற்ற மாநில சட்டப்பேரவைகளுக்கு முன்மாதிரியாக தமிழக சட்டப்பேரவையை நடத்துவேன்” என்று பேரவைத் தலைவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார்.