கபாலி படத்தின் ரிசல்ட்டை விட தமிழ் திரையுலகினர் முக்கியமாக தயாரிப்பாளர்கள் விவாதிக்க வேண்டிய ஒரு விஷயம் இந்த கபாலி ரிலீஸில் அடங்கியுள்ளது. அது பைரஸி. படம் கசிந்தால் நாம் காலியாகிவிடுவோமோ என பயந்த தாணு இதற்காக நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் அவசர வழக்காக எடுத்து விசாரித்து அப்படி படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் இணையதளங்களை முடக்கியது. இந்த வழக்குக்காக மட்டும் சுமார் கால் கோடிவரை தாணு செலவு செய்ததாக சொல்கிறார்கள்
ஆனால் அது எத்தனை மணி நேரம் நீடித்தது? நம்மை விட பல்லாயிரம் மடங்கு அட்வான்ஸாக சிந்திக்கின்றனர், செயல்படுகின்றனர். முதலில் சினிமாக்காரர்கள் இது ஒரு டெக்னாலஜி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தியேட்டர், சாட்டிலைட் போல இதுவும் படத்தை வெளியிட ஒரு வழி என்று பார்த்தால் ஆக்கபூர்வமாக இருக்கும்.
இனியாவது படத்தை சட்டபூர்வமாக இணையத்திலும் டிவிடியிலும் வெளியிட்டு சம்பாதிக்க தயாரிப்பாளர்கள் முயல வேண்டும். அப்போதுதான் மெல்ல அழிந்துவரும் தமிழ் சினிமாவுக்கு உயிர் கொடுக்கலாம்.
சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோர் டவுன்லோட் செய்து பார்த்திருக்கின்றனர். ரசிகர்களை தியேட்டரில் தான் நீ வந்து படம் பார்க்க வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? அவர்கள் எந்த வழியில் படம் பார்க்க விரும்புகிறார்களோ அந்த வழியில் பார்க்கவைத்து சம்பாதிக்கலாமே?
கார்ப்பரேட் கம்பெனிகளை நம்பி இங்கே சினிமா எடுக்க முடியாது. ஒரு சினிமா வெற்றி பெறுவது என்பதும் முதலீடு திரும்ப கைக்கு வருவதும் சாமானிய ரசிகனின் கைகளில் தான் உள்ளது. ஆயிரக்கணக்கில் டிக்கெட், பாப்கார்ன், பார்க்கிங் விலையை நிர்ணயித்து அவனை தியேட்டர் பக்கம் வரவிடாமல், திருட்டுத்தனமாக படத்தை பார்க்க நிர்ப்பந்திக்கும் நாம் தான் உண்மையில் குற்றவாளி. இதனை தயாரிப்பாளர்கள் உணர்வார்களா?
சுரேஷ்காமாட்சி (முகநூல் பதிவு)