சென்னை:
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்காவிடட்டால், பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
annan library
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த நூலகம் பராமரிக்கப்படாமல் உள்ளது என சென்னை ஐகோர்ட்டில், ஓய்வுப்பெற்ற பேராசிரியர் மனோன்மணியம்  வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, அண்ணா நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் பி.டி.ஆஷா, சுந்தர் ஆகியோரை நியமித்தது. நூலகத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர்கள் அதிலுள்ள குறைகளை அறிக்கையாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘இந்த ஐகோர்ட்டு பல முறை உத்தரவுகளை பிறப்பித்தும் நூலகத்தை அதிகாரிகள் பராமரிக்கவில்லை’ என்று கூறினார்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ள அனைத்து குறைகளும் ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் சரி செய்யப்படும்’ என்றார்.
இதையடுத்து வழக்கு ஆகஸ்டு 31ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதற்குள் நூலகத்தில் உள்ள குறைகள் அனைத்தையும் அரசு சரி செய்யவேண்டும். அப்படி சரி செய்யவில்லை என்றால், நூலகத்தை பராமரிக்க தனியார் அமைப்பு ஒன்றை இந்த ஐகோர்ட்டு உருவாக்கும். அந்த தனியார் அமைப்பு நூலகத்தை பராமரிக்கும். அதற்கான செலவுகளை தமிழக அரசு வழங்க வேண்டியது வரும்’ என்று எச்சரிக்கை செய்து உத்தரவிட்டுள்ளனர்.