மன்னார்குடி:
முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி நாளை தேனி மாவட்டம் கூடலுரில் உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழக அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் நாளை உண்ணாவிரதம் நடைபெற இருக்கிறது. உண்ணாவிரதம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
முல்லை பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய அரசு தொழில் பாதுகாப்பு படையினரை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கேரள அரசால் நிறுத்தப்பட்ட மின் இணைப்பை உடனே கொடுக்க வலியுறுத்தியும் உண்ணாவவிரதம் நடைபெறுகிறது.
முல்லை பெரியாறு பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பினை மதிக்காமல் தீர்ப்புக்கு எதிராக த கேரள முதல்வர் பினராய் விஜயனும், அமைச்சர்களும் கருத்து தெரிவித்து வருவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
உண்ணாவிரதத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கு ஆதரவாக தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
எங்களது போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும், விவசாயிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும் என அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel