கும்பகோணம்:
நெஞ்சை பதற வைத்த கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட அகோரமான தீ விபத்து நடந்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. நம் கண்களை விட்டு அகலாத அந்த பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகி கிடந்ததை பார்க்கும்போது இன்றைக்கும் மனசு துடிதுடிக்கிறது. குழந்தைகளை பறி கொடுத்தவர்களின் நிலை…!
இன்று கும்பகோண பள்ளி தீ விபத்தின் 12வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தீவிபத்து நடந்த பள்ளிகளின் முன் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் , உறவினர்கள், சகோதர சகோதரிகள், உடன் படித்த மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் தீ விபத்து ஏற்பட்ட பள்ளி முன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
2004ம் ஆண்டு ஜூலை 16ந்தேததி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர். 18 நபர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. இந்த வழக்கில் 2014ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரிக்கும்போது ஏற்பட்ட இந்த கோரமான தீ விபத்திற்கு பின், தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
ஆனால் இன்னும் தமிழகத்தில் பல பள்ளிகள் அடிப்படை வசதிகள் இன்றி சிறு சிறு வீடுகளிலும், போதிய வசதிகளின்றி மாட்டுக் கொட்டகை போல் நடைபெற்று வருவதை காண முடிகிறது.
இதுபோன்ற மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவது யார் அதிகாரியா..? அரசியல்வாதிகளின் தூண்டுதலா? இவர்களுக்கு என்ன தண்டனை?. இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியே…..?