சென்னை:
திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் கடந்த ஆண்டு உயர் அளவாக 1.30 கோடி மெட்ரிக் டன் அளவை எட்டியுள்ளது. இது புதிய சாதனை., குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர கால வேளாண்மைக் கடன், பண்ணை சார்ந்த நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்படி, இழப்பை வரையறை செய்ய இப்போது ஃபிர்கா அளவில் கணக்கெடுப்பதற்கு மாறாக, கிராம அளவில் கணக்கெடுக்கப்படும். இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் பாதிப்பு துல்லியமாக கணக்கிடப்பட்டு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகள் பெற இயலும்.
காப்பீட்டு பயன்கள் என்ன இதுவரை மகசூல் இழப்பு அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இழப்பீடு, புதிய திட்டப்படி விதைப்பு பொய்த்தல், நடவு செய்ய இயலாத நிலை, பயிர் விதைப்பு முதல் அறுவடை வரையிலான காலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடு, அறுவடைக்குப் பிறகு வயல் அளவில் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட அனைத்து இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இழப்பீட்டினை கணக்கிடும் ஈட்டுறுதி நிலை, அதிக பாதிப்புள்ளாகும் ஒன்பது மாவட்டங்களுக்கு 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்ட விவசாயிகள் அதிக இழப்பீட்டுத் தொகை பெற இயலும்.
காப்பீட்டு நிறுவனங்களுக்கு வேளாண் பயிர்களுக்காக செலுத்தப்பட வேண்டிய காப்பீட்டுக் கட்டணத்தில், ரபி பருவத்துக்கு அதாவது அக்டோபர் முதல் மார்ச் வரையிலான நடவுக் காலத்துக்கு 1.5 சதவீதம் என்ற அளவிலும், காரிப் பருவம், அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்துக்கு 2 சதவீதம் என்ற அளவிலும் விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். மீதமுள்ள காப்பீட்டுக் கட்டணத்தில் 50 சதவீதம் மத்திய அரசும், 50 சதவீதம் மாநில அரசும் வழங்கும்.
புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் தமிழக அரசுக்கு அதிகளவு செலவு ஏற்படும். எனினும், விவசாயிகளுக்கு அதிக பயன் அளிக்கக் கூடிய திட்டமாக இருப்பதால் கூடுதல் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும்.
இதுவரை பயிர்க் காப்பீட்டு கட்டண மானியமாக ஆண்டுக்கு சராசரியாக ரூ.40 கோடி மட்டுமே மாநில அரசு செலுத்தி வந்தது. புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதன் காரணமாக கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை அளவிலேயே இப்போதும் விவசாயிகள் காப்பீடு செய்தால் அரசு சுமார் ரூ.500 கோடி காப்பீட்டு மானியமாக வழங்க வேண்டும். அதிகளவில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்தால் அரசு வழங்க வேண்டிய காப்பீட்டு மானியம் இன்னும் அதிகரிக்கும்.
தென்னை விவசாயிகளைப் பொறுத்த வரை இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் தென்னை மரக் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து உடனடியாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர்  அறிவித்துள்ளார்.