விருதுகளை திருப்பித்தராதீர்கள்! படைப்பாளிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்!
“மோடி ஆட்சியில் சகிப்பு தன்மை குறைந்து விட்டது: இதன் விளைவுகளில் ஒன்றுதான் குல்பர்சி உள்பட பிரபல எழுத்தாளர்கள் மூவர் கொல்லப்பட்டது” என்று கூறி, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் 11ம் வகுப்பு மாணவி ரியா விதாசாவும் தனக்கு அளிக்கப்பட்ட பால சாகித்ய விருதை திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சாகித்ய அகாடமி விருது வாங்கிய தமிழ் எழுத்தாளர்கள் எவரும் விருதை திருப்பித்தரவில்லை. அதற்கு பதிலாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு தங்களது வருத்தத்தை தெரிவித்தார்கள்.
இதையடுத்து, “விருதுகளை பெற்றவர்கள் திருப்பி கொடுக்கிறார்கள். விருதுகளை “வாங்கி”யவர்கள் பத்திரப்படுத்துகிறார்கள்…!” என்று கிண்டலடிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வாங்கிய விருதை திருப்பித்தருவது சரியல்ல” என்று திரைப்பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “அநீதிககு எதிராக வாளைத்தான் சுழற்ற வேண்டும். நமது பேச்சும் எதிர்ப்பும்தான் வாள். விருது என்பது நமது கேடயம். அதை வீசுவது நன்றன்று” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, “வைரமுத்து நிறைய விருதுகள் “வாங்கினாலும்” இன்னும் பல விருதுகள் “வாங்க” ஆசைப்படுபவர். அதற்காகத்தான், பா.ஜ.க, எம்.பி., தருண் விஜய்க்கு, “தமிழை வளர்க்கிறார்” என்று பாராட்டு விழா எல்லாம் எடுத்தார். இப்படிப்பட்டவரிடம் வேறு எந்த கருத்தை எதிர்பார்க்க முடியும்” என்று பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறார் வைரமுத்து.