செயின்ட் டெனிஸ் :
யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுகல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் மட்டும் பங்கேற்கும் 15வது யூரோ கோப்பை கால்பந்து தொடர், பிரான்சில் நடைபெறுகிறது. மொத்தம் பங்கேற்ற 24 அணிகளில் ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட 22 அணிகள் வெளியேறின. இறுதிப் போட்டிக்கு உலக தரவரிசையில் 8வது இடத்திலிருக்கும் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, 17வது இடத்திலிருக்கும் பிரான்ஸ் அணியை சந்தித்தது.
வெளியேறிய ரொனால்டோ:
சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய பிரான்ஸ் அணி, ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 25வது நிடத்திலேயே போர்ச்சுகல் அணி கேப்டன் ரொனால்டோ காயம் காரணமாக மைதானத்திலிருந்த அழுதபடியே வெளியேறினார்.
இரு அணிகளும், அடிக்கடி எதிரணியின் கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டன். ஆனால் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்காததால், முதல் பாதி ஆட்டம் கோலின்றி சமநிலை வகித்தது.
கீப்பர்கள் அசத்தல் :
இரண்டாவது பாதி ஆட்டத்திலும், இரு அணி வீரர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணாக்கினர். இரு அணி கோல் கீப்பர்களும் எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சியை தொடர்ந்து சிறப்பாக தடுத்தனர்.
ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில்(90வது நிமிடம்) பிரான்ஸ் வீரர் கிக்னாக், 6 அடி தொலைவிலிருந்து அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு வெளியேற பிரான்ஸ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
ஆட்ட நேர முடிவில் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.
சாதித்த ஈடர்:
கூடுதல் நேரத்தில் 109வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய போர்ச்சுகல் அணியின் ஆன்டனியோ ஈடர் அசத்தலாக கோல் அடித்தார். இதுவே வெற்றி கோலாகவும் அமைந்துவிட்டது. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய போர்ச்சுகல், யூரோ கோப்பையை முதன்முறையாக வென்று வரலாறு படைத்துவிட்டது.