சென்னை:
சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய மொட்டை மாடியிலிருந்து தூக்கிவீசப்பட்ட நாய்க்குட்டி, நல்வாய்ப்பாக காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், மாடியில் நின்றபடி இளைஞர் ஒருவர் நாய்க்குட்டி ஒன்றைத் தூக்கி கீழே வீசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது. நான்வது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட அந்த நாய்க்குட்டி, மரண ஓலத்துடன் கீழே விழுந்து துடிதுடிக்கும் காட்சிகள் பார்ப்பவர் மனதை பதைபதைக்கச் செய்தது.

இந்த வீடியோவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, காவல்துறையின் சைபர் க்ரம் பிரிவிலும் புகார் செய்தனர். இதையடுத்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், அந்த நாய்க்குட்டியைத் வீசி எறிந்து அதை வீடியோவாகப் பதிவு செய்தவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எனத் தெரிய வந்தது. நாய்க்குட்டியை தூக்கி வீசியவர் கவுதம் சுதர்சன் என்றும் அதை படம் பிடித்தவர் ஆசிஸ் பால் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது தலைமறைவாக உள்ள அந்த மாணவர்களைக் கைது செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதையறிந்து தலைமறைவாகிவிட்ட அந்த மாணவர்கள் இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே, போலீசாருடன் விலங்குகள் நல ஆர்வலர் ஷ்ரவன் கிருஷ்ணன், சம்பவ இடத்துக்கு சென்றார். பலத்த காயங்களுடன் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாய்க்குட்டியை எடுத்துவந்து உரிய சிகிச்சை அளித்தார். தற்போது அதற்கு பத்ரா என்று பெயரிட்டு பாதுகாத்து வருகிறார்.

ஆரம்பத்தில் நாய்க்குட்டி பலியாகிவிட்டதாக செய்தி வந்தது. தற்போது அது உயிருடன் இருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel