சென்னை:
நாயை கொடூரமாக கொன்று அந்த காட்சியை வாட்ஸ்அப்பில் உலவவிட்ட இளைஞனை தேடிப்பிடித்து கைது செய்துள்ளது காவல்துறை.
நேற்று முன்தினம் அந்த வீடியோ காட்சி, ‘பேஸ்புக், யூ – டியூப்’ மற்றும், ‘வாட்ஸ் ஆப்’பில் பரவத்துவங்கியது. அதில், நான்காவது மாடியில் உள்ள சுற்றுச் சுவரில், ஒரு நாட்டு நாய் நிற்க, அதை இளைஞன் ஒருவர் சிரித்தபடி, கைகளால் பிடித்திருக்கிறான். மற்றொருவன் வீடியோ எடுக்கிறான்.
அந்த குட்டி நாயை, அந்த இளைஞன் தரையை நோக்கி அவர் வீசி எறிகிறான். வெகு உயரத்தில் இருந்து தரையில் விழுந்த குட்டி நாய் துடிதுடித்து மரணமடைகிறது.
இந்த காட்சியைக் கண்டவர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றார்கள்.
அது எந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதை கண்டறியும்படி, விலங்கு நல ஆர்வலர் ஆன்டனி கிளமென்ட் ரூபன் உள்ளிட்ட சிலர், சென்னை, ‘சைபர் கிரைம்’ பிரிவில் புகார் கொடுத்தனர். ‘நாய் இறப்புக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என, ஒரு தொண்டு நிறுவனம் அறிவித்தது.

அந்த கொடூர செயலை செய்தது, சென்னை, குன்றத்துாரில் உள்ள மாதா மருத்துவ கல்லுாரி யில் எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு படிக்கும் மாணவர், எஸ்.கவுதம் சுதர்சன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதை படம் பிடித்த ஆசிஷ் பால் என்பவனும் அதே கல்லூரியில் படித்து வருபவன் என்பதும் தெரிந்தது. அதைத் தொடர்ந்து, குன்றத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இருவரும், கோவூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவ தொடங்கியதும், இருவரும் திருநெல்வேலிக்கு ஓடி விட்டனர்.
அவர்களை தேடி, போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர்.
இருவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு, குன்றத்துார் போலீஸ் நிலையத்தில், மாணவர்களை சரண் அடைய செய்யும்படி கூறி இருக்கின்றனர்.
மேலும், கல்லுாரி நிர்வாகத்தின் உதவியை போலீசார் நாடியிருக்கின்றனர். இதையடுத்து, ‘இருவரும் சரணடையாவிட்டால், தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம்’ என, மருத்துவ கல்லுாரி அறிவித்துள்ளது. ஆகவே இருவரும் விரைவில் சரணடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன தண்டனை?
நாய்க்குட்டியை கொடூரமாக கொன்ற மாணவர்கள் மீது, 1960ம் ஆண்டு, பிராணிகள் வதை தடுப்பு சட்டம் – 11 ஏ பிரிவு மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் – 428, 429 ஆகிய பிரிவுகளில் காவல்துற வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில், 429வது பிரிவின்படி, அதிகபட்சம், ஐந்த ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கருத்து:
“மருத்தவர்களுக்குத் தேவைப்படும் அடிப்படை குணம் கருணைதான். ஆனால் இந்த இரு மருத்துவ மாணவர்களும் கொடூர மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பிற்காலத்தில் மருத்துவத்தையும் தவறாக பயன்படுத்துவர். ஆகவே இவர்கள் சரணடைந்தாலும், மருத்துவம் படிக்க தடை செய்ய வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிற்சேர்க்கை:
வீசி எறியப்பட்ட நாய்க்குட்டி இறந்துவிட்டதாக வந்த முதல்கட்ட தகவல் தவறு. அந்த நாய்க்குட்டி பிழஐத்துக்கொண்டது. அதுகுறித்த செய்தி..
Patrikai.com official YouTube Channel