சென்னை:
பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலுக்குத் தடை விதிக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவலில் இருந்த ஒருசில கருத்துகளுக்கு கடந்த ஆண்டு தமிழகத்தில் சில பிரிவினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அந்த நாவலை விற்பனையில் இருந்து திரும்பப் பெறுவதாக தெரிவித்த பெருமாள் முருகன் இனிதான் ஒருபோதும் எழுதப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

மாதொரு பாகன் புத்தகம்
மாதொரு பாகன் புத்தகம்

இந்த நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்செல்வன்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘நாமக்கலை சேர்ந்த பேராசிரியர் பெருமாள்முருகன், ‘மாதொரு பாகன்’ என்ற நாவலை எழுதினார். அதில், இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த நாவலை திரும்ப பெறவேண்டும் என்று பெருமாள் முருகனை நிர்பந்தம் செய்து சம்மதிக்க வைத்தனர்.  ஆகவே இந்த அமைதி பேச்சு வார்த்தையை செல்லாது என்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவினை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
அதேபோல, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் செயலாளர் பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த  மனுவில், “நாமக்கலில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றும் பெருமாள்முருகன், உதவி பேராசிரியராக பணியாற்றும் அவரது மனைவி எழிலரசி ஆகியோருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  ஆகவே அவர்கள் இருவரையும் சென்னையில் உள்ள அரசு கல்லூரிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
பெருமாள் முருகன்
பெருமாள் முருகன்

அதே நேரம், “பெண்களை அவதூறாக சித்தரிக்கும் கருத்துக்களை நாவலில் எழுதிய பெருமாள்முருகன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடவேண்டும் என்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த  தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், புஷ்பா சத்தியநாராயணா அமர்வு, இன்று தீர்ப்பளித்தது.
அதில், “மாதொரு பாகன் நாவலுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற திருச்செங்கோடு மக்கள் மன்றத்தின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது.  இந்த பிரச்னை தொடர்பாக, பெருமாள் முருகனிடம் நாமக்கல் மாவட்ட நிர்வாகக் குழு, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியது தவறு. குறிப்பிட்ட நீதிபதிகள், மாவட்ட நிர்வாகக் குழு எடுத்த முடிவு, எந்த எழுத்தாளரையும், பதிப்பாளரையும் கட்டுப்படுத்தாது.  மாதொரு பாகன் நாவலின் புத்தகங்களை பெருமாள் முருகன் திரும்பப்பெற வேண்டிய அவசியமில்லை. அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரக் கோரிய மனுவையும் ரத்துசெய்கிறோம்” என்று தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
மேலும், படைப்பாளிகளுக்கு எதிரான போராட்டத்தின்போது கடைபிடிக்கப்படவேண்டிய நெறிமுறைகளை வகுத்திருப்பதாகவும் அவற்றை பின்பற்றுவது பற்றி 3 மாதங்களுக்குள் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் அந்த தீர்ப்பில், மாதொருபாகன் நாவல் தொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்கிறோம். இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கள் புத்தகங்களில் இடம் பெறும்போது, அது குறித்து விசாரித்து தகுந்த முடிவினை எடுக்க தமிழக அரசு அறிஞர்களை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும். இதன் மூலம், இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஐகோர்ட்டுக்கு வருவதை தடுக்க முடியும். எனவே, இந்து தொடர்பான மனுவை ஏற்றுக்கொண்டு, அதை பைசல் செய்கிறோம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மாதொரு பாகன் நாவலுக்கு கடந்த ஆண்டு ‘சமன்வாய் பாஷா சம்மன்’ என்னும் உயரிய விருது வழங்கப்பட்டது. 49 வயது பெருமாள் முருகன் இதுவரை 9 நாவல்களையும், தலா 4 தொகுதிகளைக் கொண்ட சிறுகதைகள், கவிதைகளையும் எழுதி இருக்கிறார். இவருடைய மாதொருபாகன்(ஒன் பார்ட் உமன்) உள்ளிட்ட 3 நாவல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.