“பேஸ்புக்கில் பெண்கள் தங்கள் புகைப்படத்தை பதியக்கூடாது. அது அவர்களுக்கு பாதுகாப்பு அல்ல” என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்து பேஸ்புக்கில் இயங்கும் பெண்கள் சிலரது கருத்துக்கள் தொடர்கின்றன.
சவிதா பிரகாசம்:
நடராஜன் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒருவன் ஒரு பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் சமூகவலைதளங்களில் இருந்துதான் அவள் படத்தை எடுக்க வேண்டும் என்பது இல்லை. அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுகூட அவன் புகைப்படம் எடுத்துவிடலாம். நூற்றுக்கணக்கானவர்கள் கூடும் இடத்தில் யார் நம்மை புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதை கவனிக்க முடியாது அல்லவா?
பேஸ்புக்கில் படங்களை பதியாதீர்கள். அல்லது, நண்பர்கள், உறவினர்கள் மட்டும் பார்ப்பது மாதிரி படங்களை பதிவிடுங்கள் என்கிறார். பெண்களை அவமானப்படுத்த படங்களை மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் உலவவிடும் கேவலத்தை, முன்பின் தெரியாதவர்கள் செய்வதில்லை. ஏதோ ஒருவகையில் அருகில் இருப்பவர்கள்தான் இப்படி செய்கிறார்கள்.
ஆகவே, இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களைக் கண்டு பயந்து ஒடுங்கிவிடாமல் எதிர்தது நிற்கும் தைரியத்தை பெண்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதே நேரம் முகநூலில் எனது புகைப்படத்தை நான் பதியவில்லை. காரணம், நியாயத்துக்காக எதிர்த்து நிற்க நான்தயார். ஆனால் என் குடும்பத்தினருக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால்தான்.
(கருத்துக்கள் தொடர்கின்றன)