மதுரை:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆம்னி பேருந்தை ஓட்டுநர் மதுபோதையில் இயக்கியதாக கூறி பயணிகள் கண்டித்ததை அடுத்து, ஓட்டுநர் பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓடியதால் பயணிகள் தவித்தனர்.
நேற்று மாலை நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட கே.பி.என். டிராவல்ஸ் தனியார் ஆம்னி பேருந்து, சாத்தூர் அருகே வந்தபோது ஓட்டுனர், பேருந்தை நிறுத்திவிட்டு மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பயணிகள் ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டுனர் திருமங்கலம் அருகே இரவு 11 மணி அளவில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்.

இதனால் நடு வழியில் பயணிகள் தவித்து நின்றன. இது குறித்து அந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், “நான் முதல் இருக்கையில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்தேன். ஓட்டுனர் ஏதோ செய்வது போல் இருந்தது. எட்டி பார்த்தால் அவர் மது அருந்தி கொண்டிருந்தார். கிளீனரிடம் பேருந்தை எப்படி ஓட்ட வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார். குடித்துவிட்டு ஓட்டலாமா என்று பதைபதைத்துப்போய் கேட்டேன். அதற்கு அவர், இது என்னோட பாலிசி. உங்களை நான் பாதுகாப்பாக கொண்டு விட்டுவிவேன் என்றார். பிறகு திடீரென்று பேருந்தை நிறுத்தி ஓடிவிட்டார்” என்றார். .
பேருந்தில் வந்த 32 பயணிகளும் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பரிதவித்துப்போய் காத்திருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாற்று ஓட்டுனரை வரவழைத்து பேருந்தை அனுப்பி வைத்தனர்
Patrikai.com official YouTube Channel