‘சகிச்சிகிட்டு போயிருக்கலாம். மன்னிச்சு விட்டிருக்கலாம். ஆனா, நான் பொம்பளை இல்லையே. ஆ…..ம்பள. ஆண் நெடில். பெண் குறில்’ படத்தின் இறுதியில் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் வசனம்தான் ஒட்டுமொத்த படமும்.
ஆனால் “இந்த ஆணாதிக்கம் என்பது எத்தனை அபத்தமானது” என்பதை அத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
படம் ரிலீஸாகாததால் எப்போதும் குடித்துக்கொண்டிருக்கும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் தம்பி பாபி சிம்ஹா, தொல்லியல் துறை மாணவர். இவர்களின் அப்பா ராதாரவி
சிற்பங்களை விற்கும் கடையில் வேலை செய்பவர் விஜய் சேதுபதி. இவர் ம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நெருங்கிய நண்பர்.
இந்த மூன்று பேரின் வாழ்க்கையில் வரும் மூன்று பெண்கள் வடிவுக்கரசி, கமாலினி, அஞ்சலி.
சாதாரணமான பெண்ணாக வாழ முடியாது என்று எஸ்.ஜே.சூர்யாவை திருமணம் செய்துகொள்ளும் கமாலினி, குடிகாரனும் கோபக்காரனுமான கணவனுடன் போராடிவருகிறார்.
காதல் என கனவுகளுடன் விஜய்சேதுபதியை திருமணம் செய்து கொள்ளும் அஞ்சலி, விஜய் சேதுபதியின் விபரீத காதலால் எதிர்பார்த்த காதல் கிடைக்காமல் ஏமாற்றத்தை சந்திக்கிறார்.
கோபக்காரக் கணவனுடன் பல ஆண்டுகள் போராடி வெல்ல முடியாமல் கோமாவுக்குச் சென்று படுத்த படுக்கையாக கிடக்கிறார் வடிவுக்கரசி.
இந்த மூன்று பெண்களும் தன் கணவனுக்காக என்ன செய்கிறார்கள், எவ்வளவு இழக்கிறார்கள், இவர்களின் பொறுமை காணாமல் போனால் என்ன ஆகும்… ஒரு ஆணின் கோபத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எந்த அளவுக்கு பாதிக்கும்.. என்பதை அழகுற சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
எஸ்.ஜே.சூர்யா அதி அற்புதமாக நடித்திருக்கிறார். குடிகாரர், கணவர், படைப்பாளி, அப்பா, அண்ணன்.. இப்படி அனைத்துவிதமான உணர்வுகளையும் இயல்பாக கொட்டியிருக்கிறார்.
விஜய் சேதுபதியும், வழக்கம்போல் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி, ராதாரவி, சீனு மோகன் என அனைவரையும் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு, இசை.. என்று தனித்தனியாக குறிப்பிட வேணடியதில்லை. அத்தனையுயும் அழகாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர்.
படம் வருவதற்கு முன், “ஆண்களுக்கு எதிரானதோ” என்ற சந்தேகம் எழுந்திருந்தது. ஆனால் ஆண் திமிருக்குத்தான் எதிரானது.
வழக்கம்போல சிறப்பான படத்தை அளித்திருக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துகள்.