‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் விஷ்ணு விஷால், நாயகி நிக்கி கல்ராணி, நடிகர் சூரி, ரவி மரியா, இசையமைப்பாளர் C..சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரவி மரியா பேசும்போது, “படத்திற்கு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ என்று பெயர் வைத்ததற்கு பதிலாக ‘இறங்கி அடிச்சா எப்படி இருக்கும்’னு வச்சிருக்கலாம். அந்த அளவுக்கு எல்லோரும் இறங்கி அடிச்சிருக்காங்க..
நான் இயக்குநராக பெரிய அளவில ஜொலிக்கலை. ஆனாலும் நடிகனா சாதிக்கணும் என்று வெறியோடு இருக்கிறேன். அதனால் தான் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில்தான் மட்டும் நடிக்கிறேன். எப்பவுமே இயக்குநர் எழில் எனக்கு மிக சிறந்த கதாபாத்திரங்களையே கொடுத்து வர்றார். இந்தப் படத்திலும் அது தொடர்கிறது..” என்றார் உற்சாகமாக.
இசையமைப்பாளர் சத்யா, “நான் முதன் முறையாக இப்படத்தில் இயக்குநர் எழிலுடன் இணைந்து பணியாற்றுகிறேன். நான் எப்போதும் ஒரு படத்திற்கு பின்னணி இசையமைக்கும்போது , முழு படத்தையும் பார்த்துவிட்டு இசையமைப்பதில்லை. ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு சீனாக பார்த்து இசையமைப்பதுதான் என் வழக்கம். ஆனால் இந்த படத்தை முழுசும் பார்த்துவிட்டுத்தான் இசையமைத்தேன் காரணம் படத்தில் சூரியின் காமெடி! அவ்வளவு சிறப்பாக இருக்கிறது சூரியோட போர்ஷன்” என்றார்.
நாயகன் விஷ்ணு விஷால், “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படம் எனக்கு மட்டும்தான் பத்தாவது திரைப்படம் என்று நினைத்தேன். ஆனால் நான் இதைப் பற்றி டைரக்டர் எழில் சாரிடம் கூறும்போதுதான், அவருக்கும் இது பத்தாவது படம் என்று தெரியவந்துச்சு. அதன் பின் இசை வெளியீட்டு நேரத்தில்தான் இசையமைப்பாளர் சத்யாவிற்கும் இது பத்தாவது படம்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
‘நீர்ப்பறவை’ படத்திற்கு பிறகு படங்களை தேர்ந்தெடுத்துத்தான் நடிக்கணும் என்று நினைத்தேன். அதே போல் இதுவரை எல்லா படங்களையும் கவனமா தேர்வு செய்துதான் நடிச்சிகிட்டு வர்றேன். இந்த படமும் நான் யோசித்து தேர்வு செய்து நடிக்கிற படம்தான்”என்றார்.
இயக்குநர் எழில் மாறன், “இந்த படத்தின் கதையை நாயகன் விஷ்ணு விஷாலிடம் கூறியதும், கதை பிடித்த காரணத்தால் தானே தயாரிப்பதாக கூறினார். அவருடைய தயாரிப்பு ஐடியாக்கள் மிகவும் புதிதாக இருந்தன. . விஷ்ணு விஷாலின் தனிச் சிறப்பு அவருடைய ப்ரோமோஷன் ஐடியாக்கள்தான். இன்றைய காலகட்டத்தில் படத்தை தயாரிப்பதைவிட அதை விளம்பரப்படுத்துவதுதான் கஷ்டமான விசயம்.
படத்தின் ஹீரோயின் நிக்கி கல்ராணி கதாபாத்திரம் மிகவும் டிஃப்ரண்ட்டானது. பெண் போலீசாக நடித்து சண்டை காட்சிகளிலும் கலக்கியுள்ளார் நிக்கி…” என்றார்.