”மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை காலக்கெடு தேதி முடிந்து, ஆறு மாதம் ஆன பின்பும் தமிழக அரசால் சமர்ப்பிக்கப்படவில்லை,” என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புகார் தெரிவித்துள்ளார்.
‘மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், சுற்றுப்புறவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் குறித்து 2014, மார்ச்சில், முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது வரையறுக்கப்பட்டு, முதல் வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டது. கஸ்துாரி ரங்கன் தலைமையிலான, 10 பேர் குழு தந்த ஆய்வறிக்கையின்படி, இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதில் மேற்கு தொடர்ச்சி மலையில், உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பதற்கான பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன. இதற்கு, மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவற்றின் கருத்தை மத்திய அரசு கேட்டிருந்தது.
இது குறித்து டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
“இரண்டு ஆண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நான் பதவியேற்றபோது, கஸ்துாரிரங்கன் அறிக்கை தொடர்பாக, எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த அறிக்கை தொடர்பாக, அனைத்து மாநிலங்களின் கருத்தை கேட்டிருந்தோம். கருத்து அறிக்கையை, தமிழகம் தவிர எல்லா மாநிலங்களும், சமர்ப்பித்து விட்டன.
ஆனால், இதற்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து, ஆறு மாதம் ஆன பிறகும் தமிழக அரசு, அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதனால், கஸ்துாரி ரங்கன் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளை அமல்படுத்த முடியவில்லை” என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில்,”தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்துள்ளதால், அடுத்த வாரம், தமிழக அரசு, கருத்து அறிக்கையை சமர்ப்பிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், மாசு ஏற்படுத்தும் நான்கு தொழிற்சாலைகளின் பணிகள், ஒரு பெரிய வர்த்தக கட்டுமானம் தவிர, பிற வர்த்தக ரீதியிலான நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். மேற்கு தொடர்ச்சி மலையில், பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளில் வாழும், 50 லட்சம் மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையில், வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்தார்.