மாட்டுக்கறி உண்டார் என்று சொல்லி இஸ்லாமிய முதியவர் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுதும் ஒருவித பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, “மாட்டுக்கறிக்கு பதிலாக மனித மலத்தை திண்ணட்டும். மாட்டுக்கறி தின்றால் அதற்குறிய விளைவை சந்தித்தே ஆகவேண்டும்” என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் patrikai.com இதழ் பேட்டியில் தெரிவித்ததும், , “இந்துக்கள் புனிதமாக கருதும் மாட்டை இஸ்லாமியர் வெட்டி உண்டால், அவர்கள் “ஒதுக்கப்பட்ட விலங்காக” அருவெறுப்பாக நினைக்கும் பன்றியை வெட்டி சமைத்து சாப்பிடுவோம்” என்று பா.ஜ.கவின் ஹெச்.ராஜா கூறியதும் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் “பன்றி பலியை தடுத்த இஸ்லாமியர்” என்ற தலைப்பில் சமூகவலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது..
“புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணிவிளான் 7 வது தெரு மக்கள் மதுரை வீரனுக்கு கிடாய் மற்றும் பன்றி படையல் வைக்க முற்பட்டபோது அந்த பகுதியில் உள்ள முஸ்லிம்கள் பன்றி வெட்டகூடாது என்று பிரச்சனை செய்ய அதற்கு ஆதரவாக தவ்ஹித் ஜமாத் மமக போன்ன அமைப்புகள் ஆதரவு தர விஷயம் மாவட்ட நிர்வாகத்துக்கு போக மாவட்ட நிர்வாகம் பன்றி வெட்ட தடை விதித்துவிட்டது”
- ஏற்கெனவே பதட்டமான சூழல் நிலவுகையில் இந்த பதிவு மேலும் பதட்டத்தை அதிகரிக்கக்கூடும். ஆகவே உடனடியாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகாண்டு, “இந்த செய்தி உண்மையா” என்று கேட்டோம்.
“அது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை” என்று கூறினர்.
பன்றி பலியிடுவதை தடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் ம.ம.கட்சியினரை தொடர்புகொண்டு கேட்டபோதும் “அப்படி ஓர் சம்பவம் நிகழவில்லை” என்றார்கள்.
அக் கட்சியின் மூல அமைப்பான த.மு.மு.க.வின் தாம்பரம் நகர செயலாளர், ஆஸாத் கமில், “அறந்தாங்கியில் அப்படி ஓர் சம்பவம் நடக்கவே இல்லை. அங்கு மட்டுமல்ல எங்கும் நடக்காது.
தமிழகம் முழுதும் பன்றிகளை வெட்டி விற்கிறார்கள். எந்த முஸ்லிமும் அடாவடியாக அதைத் தடுக்க முயலவில்லையே. தவறான விசயம் நடந்தாலும் அதை ஜனநாயக முறைப்படி எதிர்ப்போமே தவிர வீண் பிரச்சினை செய்யமாட்டோம்..” என்றார்.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் இன்னொரு அமைப்பபின் மாநில செயலாளர் .சென்னை அப்துர் ரஹீமும் இதே கருத்தைத் தெரிவித்தார்.
ஆகவே இது பொய்யக பரப்பபடும் செய்தி. யாரும் நம்ப வேண்டாம்.