a
ஸ்ரீபெரும்புதூர்:
“கருத்துக் கணிப்புகள் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்” என்றும் தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், பல்வேறு ஊடகங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெவ்வேறு விதமாக  இருந்தாலும், பொதுவாக தே.மு.தி.க. – ம.ந. கூட்டணி, படுதோல்வி அடையும் என்று தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் மா.வீரக்குமாரை ஆதரித்து, பிரேமலதா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது..
“கடந்த ஐம்பது ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து, தமிழகத்தை ஊழல் மாநிலமாக மாற்றி விட்டன. இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காகவே தேமுதிக தலைமையிலான மெகா கூட்டணி உருவாகி இருக்கிறது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது இந்த அணிதான்.  கருத்துக் கணிப்புகளைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் அவை உண்மையானதாக இருந்ததே கிடையாது.
ஆளும் கட்சி, ஆண்ட கட்சி ஆகியவற்றிடம் காசு வாங்கிக் கொண்டு ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
தற்போது புலனாய்வுத் துறை மூலமாக கிடைத்துள்ள தகவலின்படி, தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி 130 முதல்  160 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்”  என்று பேசினார்  பிரேமலதா.