தற்போதைய தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் விந்தியா, நமீதா, ராமராஜன் உள்ளிட்ட நட்சத்திரப்பேச்சாளர்கள் தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நட்சத்திரப்பேச்சாளர் மதுரை ஆதீனம். நடிகர்களுக்கு இணையான புகழை சர்ச்சைகளால் பெற்றவர்.
பிரச்சாரத்துக்காக தஞ்சை, வேதாரண்யம் என்று பரபரப்பான சுற்றுப்பயணத்தில் இருந்தவரை பிடித்து சில கேள்விகளை வைத்தோம்.
இதோ பத்திரிகை டாட் காம் இதழுக்கு மதுரை ஆதீனம் அளித்த பேட்டி..
வரும் சட்டமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக அமர்வார். அ.தி.மு.க., பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறும்.
எப்படி இவ்வளவு உறதியாக சொல்கிறீர்கள்.. ஏற்கெனவே நித்தியானந்தாவை இளைய பீடாதிபதியாக நியமிக்க வேண்டும் என்று உங்கள் கனவில் வந்து சிவபெருமான் சொன்னாரே.. அது போல வரும் தேர்தல் முடிவையும் சொன்னாரா..
அப்படி எல்லாம் சிவபெருமான் எப்போதும் சொல்லவில்லை. நானும் அப்படி தெரிவிக்கவில்லை. பத்திரிகைகளில் அவர்களாக கற்பனை செய்து எழுதிக்கொண்டார்கள். தவிர, நித்தியானந்தா பற்றி இனி பேச வேண்டாம். அது ஆல்ரெடி ஓவர்.
சரி, ஜெயலலிதா வெல்வார் என்கிறீர்கள். ஆனால் அவர் மீது பலவித புகார்கள் கூறப்படுகிறதே. ஆயிரம் கோடி ரூபாய்க்கு தியேட்டர் வாங்கிய விவகாரம், சென்னை செம்பரம்பாக்கம் ஏரியை திடுமென திறந்துவிட்டதால் வெள்ளம்…
(குறுக்கிட்டு..) இருங்க.. சொல்றவங்க, ஆயிரம் சொல்வாங்க! அம்மா மீது சொல்லப்படும் பொய்க் குற்றச்சாட்டுக்களை மக்கள் நம்பலை. அவங்க, நம்ம மக்களுக்காக நிறைய, நிறைய நன்மைகள் செய்திருக்காங்க. அந்த பலன்களை எல்லாம் மக்கள் அனுபவிச்சிருக்காங்க. அதனால அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.
மதுவிலக்கை கொண்டுவரமுடியாது என அ.தி.மு.க. அரசு சட்டசபையிலேயே சொன்னது. தற்போது கூட, மதுவிலக்கு கோரி போராடியவர்கள் மீது தமிழக போலீஸ் கடுமையான தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த நிலையில், படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்கிற ஜெயலலிதாவின் வார்த்தையை மக்கள் நம்புவார்களா?
நிச்சயமா நம்புவாங்க. அது உறுதி. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவார்கள் அம்மா அவர்கள்.
அந்த படிப்படியாக.. என்பதை இந்த ஐந்தாண்டு ஆட்சிகாலத்தில் அமல்படுத்தி இருக்கலாமே என்ற கேள்வி எழுப்பப்படுகிறதே..!
எல்லாம் செஞ்சிகிட்டுத்தான் இருக்காங்க. ஆனா உடனடியா செய்துட முடியாது. நிறைய நிர்வாக பிரச்சினைகள் இருக்கு. டாஸ்மாக்- கில ஒரு லட்சம் பேர் வேலை பார்க்கிறாங்க. அவங்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்யணும். டாஸ்மாக் மூலமா வர்ற வருமானம் நின்றுவிட்டால், அதற்கு மாற்று வருமானத்தை ஏற்பாடு செய்யணும். அதுக்கு திட்டம் தீட்டணும். எல்லா செகரட்டரிகளையும் கூப்பிட்டு பேசணும்.. அது உடனடியா முடியாதே.! அடுத்த ஆட்சி காலத்துல அம்மா நிச்சயம் மதுவிலக்கு கொண்டு வருவார்.
சரி, வரும் தேர்தலில் தி.மு.க. நிலை எப்படி இருக்கும்?
அது இறைவன் கையில் இருக்கு..!
இருக்கட்டும். உங்களுக்கு தெரியும் இல்லே.. சொல்லுங்களேன்..!
நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை..
சரி.. ஆன்மிகவாதிகள் அரசியலில் ஈடுபடலாமா என்ற கேள்வி உங்கள் மீது வைக்கப்படுதே..
நான் இந்திய நாட்டின் குடிமகன். ஒரு வாக்காளன். நான் ஒரு அரசை ஆதரிக்கணும் அல்லது எதிர்க்கணும் அல்லது நடுநிலையோட இருக்கணும். நான் ஆதரிக்கும் நிலைப்பாட்டோடு இருக்கிறேன். அதே நேரத்தில் எந்த ஒரு எதிர்க்கட்சிக்கும் தலைவருக்கும் எதிரானவன் குரோதமானவன் இல்லை.
“இதுகூட பரவாயில்லை… ஜெயலலிதாவை அமைச்சர்களைவிட அதிகமாக குனிந்து “அம்மா”வை வணங்கியது ஏன்.. என்று பலரும் கேட்கிறார்களே..?
(இந்தக் கேள்விக்கும் இன்னும் பல கேள்விகளுக்கும் அடுத்த பகுதியில் பதில் சொல்கிறார் மதுரை ஆதீனம்)
பேட்டி: டி.வி.எஸ். சோமு