senthil
கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய நலத்திட்ட உதவிகளால் மீண்டும் அதிமுக வெற்றி பெறும் என, நகைச்சுவை நடிகர் செந்தில் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதனை ஆதரித்து, நடிகர் செந்தில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். சின்னாளப்பட்டியில் அவர் பேசியதாவது: இந்தத் தேர்தலுடன் தமிழகத்தில் திமுக காணாமல் போய்விடும். கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்துடன் கூட்டணி வைத்துள்ள மக்கள் நலக் கூட்டணி மூழ்குவதும் உறுதியாகிவிட்டது.
தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மட்டுமின்றி, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்திய நலத்திட்ட உதவிகளால் மீண்டும் அதிமுக பெற்றிபெறும். எனவே, ஆத்தூர் தொகுதி மக்கள் நத்தம் இரா. விசுவநாதனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.