b
இந்திய வானிலை ஆய்வுத்துறை, “அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலொர மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படலாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து  பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கஜலட்சுமி அறிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகளில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என்பதாலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்திலும்  அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்ப அலையின் தாக்கம் ஏற்படலாம். இது குறித்து பொதுமக்கள்  அச்சப்பட தேவையில்லை என்றாலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
கீழ்காணும் வழிமுறைகளை கடைபிடிக்குமாறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கஜலட்சுமி,அறிவுறுத்தியுள்ளார்:

கஜலட்சுமி
கஜலட்சுமி

“பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம். குறிப்பாக, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும். இந்த நேரத்தில் அதிகளவில் களைப்படைய வைக்கும் பணிகளை செய்ய வேண்டாம் தண்ணீர் நன்கு பருகவும்.  காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவதோடு, குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை பார்க்கிங் செய்துள்ள வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம்.
தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் வெளியே செல்ல நேரும்போது குடிநீர் எடுத்துச் செல்வதுடன், தலை, கழுத்து மற்றும் கை கால்களை சிறிது ஈரமான துணியினால் மூடி செல்லுங்கள். தொப்பி அல்லது குடை எடுத்துச் செல்லுங்கள்.
டீ, காபி போன்ற பானங்கள் தவிர்த்து, மோர், கஞ்சி மற்றும் பழச்சாறுகள் போன்ற பானங்களை அருந்தவும். வெயிலினால் சோர்வு /உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள மருத்துவரை அணுகவும்.
கால்நடைகளை நிழலான இடங்களில் தங்க வைப்பதோடு, அவற்றிக்கு தேவையான அளவு தண்ணீரும் வழங்கிட வேண்டும்”  – இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.