டில்லி :
பி.சி.சி.ஐ. கூட்டத்தில், சீனிவாசன் கலந்துகொள்வது குறித்த வழக்கை, விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆறாவது ஐ.பி.எல். போட்டிகளின் போது பிக்ஸிங் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முகுல் முட்கல் குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணையின் இறுதியில் சீனிவாசன் ஐ.பி.எல். அணி அல்லது பி.சி.சி.ஐ. இரண்டில் ஏதாவது ஒன்றையே தேர்ந்தெடுக்க முடியும் என்று உத்தரவிட்டது. மேலும் பி.சி.சி.ஐ.-ன் எந்த ஒரு பொறுப்புவகிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் சென்னையில் கடந்த பிப்ரவரி 8-ந் தேதியன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ. செயற்குழுவுக்கு சீனிவாசன் தலைமை வகித்தார்.
இதன் பிறகு உச்சநீதிமன்றத்தில் ஐ.பி.எல். பிக்சிங் வழக்கு நீதிபதிகள் தாக்குர் மற்றும் இப்ராகிம் கலிபுல்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பி.சி.சி.ஐ. செயற்குழுவுக்கு சீனிவாசன் தலைமை வகித்திருக்கக்கூடாது” என்று கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில்தான், “பி.சி.சி.ஐ. கூட்டத்தில், சீனிவாசன் கலந்துகொள்வது குறித்த வழக்கை, விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், “ கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை” என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.