மலிவு விலையில் வயிற்றுப்போக்கு மருந்து கண்டுபிடிப்பு : இந்திய மருத்துவதுறை சாதனை
இந்தியாவில் ஆண்டுதோறும் 3 லட்சம் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை மிகவும் மலிவு விலையில் இந்திய மருத்துவ துறை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.
கொடிய வைரஸான ரோட்டோவாக் குழந்தைகளுக்ககு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி உயிரைப்பறிக்கும் தன்மை கொண்டது. இந்தக் கொடிய நோய்க்கு இந்தியாவில் ஆண்டுதோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி வருகின்றனர். இந்நோய்க்கு உலகத்திலேயே மிகவும் மலிவான விலையில் இந்திய மருத்துவத்துறை ரோட்டோவாக் எனும் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.
வயிற்றுப்போக்கிற்காக தற்போது பயன்படுத்தப்படும் இந்த மருந்தின் விலை மிகவும் அதிகம். இதனால் இந்த மருந்தை அனைவராலும் வாங்கி பயன்படுத்த முடியாத அளவில் அதன் விலை உள்ளது.இனிமேல் அந்தக் கவலை யாருக்கும் ஏற்படாது. ஏனெனில் குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்தும் தடுப்பூசி பிரசாரம் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஒடிசாவில் தொடங்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஆந்திரா ஆகிய மா நிலங்களுக்கும் இது தொடரும். இப்பிரசாரத்தின்போது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும். பிறந்த 6 வாரம் முதல் 10 வாரம் நிரம்பிய குழந்தைகளுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி போடப்படும். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மற்ற மாநிலங்களிலும் இத்திட்டம் அமலல்படுத்தப்படும்.
வயிற்றுப்போக்கு நோயினால் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் குழந்தைகள் பலியாவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக 1 லட்சம் குழந்தைகள் ரோட்டா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி வருகின்றனர்.
இதேபோன்ற மருந்து தற்போது சுவிட்சர்லாந்தில் கிடைக்கிறது. ஆனால் அதன் விலை ரூ.2000 ஆகும். இதனை அனைவராலும் விலை கொடுத்து வாங்கமுடியாது. ஆனால் ஹைதராபாத்தில் இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதே மருந்தினைத் தயாரித்து ரூ.60க்கு விற்பனை செய்யப்போகிறது.
இம்மருந்து தொடர்பாக பல்லாண்டுகளாக பல பரிசோதனைகள் நடத்தப்பட்டு இறுதியில் வெற்றிகரமான மருந்தாக நிருபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து உலகத்தின் வளரும் நாடுகளுக்கு இம்மருந்தினை ஏற்றுமதி செய்வதற்கான அங்கீகாரத்தை உலக சுகாதார நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வழங்கும் என எதிர்பார்க்க்ப்படுகிறது.
இந்திய மருத்துவத்துறையின் இந்த மகத்துவமான சாதனையை பலரும் வரவேற்றுள்ளனர். இதனால் இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு ஏழை நாடுகளும் மிகக் குறைந்த விலையில் வயிற்றுப்போக்கை தடுப்பதற்கான ஊசியைப் பயன்படுத்த முடியும். இதுபோன்று மலிவு விலையில் இன்னும் பல மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான திருப்புமுனையாகவும், தூண்டுதலாகவும் இது விளங்கும் என்பது உண்மை.