சுதந்திரமாய் வாழ ஒரு வாழ்க்கை வேண்டும்: ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புத் தலைவரின் முன்னாள் மனைவி உருக்கம்.
சுதந்திராமய் புதுவாழ்க்கை வாழ ஆசைப்படுவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புத் தலைவரின் முன்னாள் மனைவி தொலைக்காட்சிப்பேட்டி ஒன்றில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இன்று உலகையே அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்புகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்புதான் முதலிடத்தில் உள்ளது. அந்த அமைப்பின் தலைவனாக இருப்பவன் அபு பக்கர் அல்- பஹ்தாதி. அவனுடைய முன்னாள மனைவியான 28 வயதான சாஜா அல் துல்மைமி இந்தாண்டில்தான் லெபனான் சிறையிலிருந்து விடுதலை ஆனார். அவருடைய விடுதலைக்குப்பின் முதன்முறையாக சி என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் உருக்கமாக கூறியிருப்பதாவது.
பாஹ்தாதி ஆரம்பத்தில் ரத்தவெறி பிடித்த தீவிரவாதி அல்ல. உலகத்தின் அச்சுறுத்தல் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் துவங்கும் முன் அவர் ஒரு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர். குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட மனிதனாகத்தான் இருந்தார் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த காலத்தில் தான் எனக்கு அவருடன் திருமணம் நடைபெற்றது பல்கலைக்கழகப் பணி முடிந்ததும் தவறாமல் வீடு வந்து சேரும் அவர், அரசியல் எதிர்ப்பு இயக்கங்களில் கூட கலந்து கொண்டதில்லை.
தன் பிள்ளைகளை நேசிக்கும் தந்தையாகவே இருந்தார். அவர் எப்போதும் குழந்தைகளுடன்தான் இருப்பார். குழந்தைகளை எப்படி வழி நடத்தவேண்டும் என்பதை தெளிவாக அறிந்தவர். ஆனால் அந்த மனிதர் எப்படி பயங்கரவாத கும்பலின் தலைவர் ஆனார் எனத் தெரியவில்லை. அவர் எப்போதும் மர்மங்கள் நிறைந்த மனிதராகவே இருந்தார். ஆனால்,இரண்டு மனைவிகளுடன் வாழ்வது என்பது அவருக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.
நான் கர்ப்பமானவுடன் அவரை விட்டு ஓடிவந்துவிட்டேன். அது ஏன் என்று தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நான் சந்தோஷமாக இல்லை. அவரை விட்டு வந்துவிட்டபிறகு என்னை மீண்டும் திரும்ப அழைத்துச் செல்ல பலமுறை முயற்சி செய்தார். ஆனால் இனிமேல் அவருடன் செல்வதில்லை என்பதில் மிகத் தெளிவாக இருந்தேன். அதற்காக மன ரீதியாக தயாராகிவிட்டேன். என்னை திரும்பவும் அழைத்துச் செல்வதற்காக 2009 ஆம் ஆண்டில் கடைசியாகப் பேசினார். என் மகளின் பாதுகாப்பு பற்றித்தான் நான் பெரிதும் கவலைப்படுகிறேன். என் மகளுக்கு அவரால் ஆபத்துகள் ஏற்படலாம் என அஞ்சுகிறேன். என் மகளை வெளிநாட்டில் படிக்க வைக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நான் எந்த அரபு நாடுகளிலும் வாழவிரும்பவில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் என் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அங்குதான் எனக்கு சிறந்த வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன்.
பாஹ்தாதியின் முன்னாள் மனைவி என்றுதான் என்னை ஐரோப்பியர்கள் நினைப்பார்களோ என்பதுதான் எனக்கு வருத்தமளிக்கிறது. பாஹ்தாதியுடன் வாழ்ந்த என்னுடைய பழைய வாழ்க்கையை ஐரோப்பியர்கள் புறந்தள்ளி என்னை அன்போடு ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
அவருடன் மீண்டும் நான் வாழவேண்டும் என ஆசைப்பட்டால் என்னை இளவரசியாக வைத்திருப்பார். எனக்கு பொன்னும் பொருளும் பணமும் அள்ளி வழங்குவார். ஆனால் நான் அதற்கெல்லாம் ஆசைப்பட்டவள் அல்ல. எனக்குப் பணம் வேண்டாம் எல்லோரையும் போல சுதந்திரமாய் வாழ ஒரு வாழ்க்கை. அது போதும் எனக்கு. இவ்வாறு அவர் தொலைக்காட்சிப் பேட்டியில் உருக்கமாய்த் தெரிவித்தார்.