சென்னைச் சிறையில் இருந்தபோது பிரபாகரன் ஒரு முன்மாதிரியான சிறைவாசியாகத் திகழ்ந்தார். சிறையில் உள்ள அசெளகரியங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டார். குறிப்பாக, தரமற்ற உணவை சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடம் இயற்கையாகவே இருந்தது.
அவருடன் சிறையில் இருந்த இராகவனுக்கு அந்தப் பக்குவம் இல்லாத காரணத்தினால் தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
ஆனால்,பிரபாகரன் அவரை இதற்காக மிகவும் கடிந்துகொண்டார். “சிறைக்கு வந்துவிட்டபிறகு சிறையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதோடு, எத்தகைய துன்பங்களுக்கு ஆளானாலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய கடமை உண்மையான போராளிகளுக்கு இருக்க வேண்டும். சிறுசிறு குறைகளைப் பெரிதாக்கி அதிகாரிகளிடம் புகார் செய்வது அதற்காகப் போராடுவதும் சரியன்று: என அறிவுரை கூறினார்.
இந்த நிலையில், பிரபாகரனையும், உமாமகேஸ்வரனையும் வெளியில் கொண்டுவருவது குறித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தழிழ் மாநிலச் செயலாளர் ப.மாணிக்கம் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். அதன் பின்னர் பிரபல வழக்கறிஞர் என்.டி வானமாமலை அவர்களை நாங்கள் இருவருமாக அணுகி இந்த வழக்கில் போராளிகளுக்காக வாதாடும்படி வேண்டிக்கொண்டோம்.
சில மாதங்களுக்குப் பிறகு பிரபாகரன்,உமாமகேசுவரனும் மற்றவர்களும் பிணையில் விடுதலையானார்கள். உமா சென்னையிலும், பிரபாகரன் மதுரையிலும், இராகவன் புதுகோட்டையிலும் இருக்கவேண்டும் என நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
நீதிமன்றம் பிறப்பித்த இந்த ஆணைதான் பிரபாகரனை எனக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவந்து சேர்த்தது.
நீதிமன்ற ஆணை வந்த அன்று இரவே பிரபாகரனை அழைத்துக்கொண்டு மதுரைக்குப் பயணமானேன்.
மதுரை மேலமாசி வீதியில் எங்களுடைய பாரம்பரிய வீடு உள்ளது. சமாபமாகத்தான் அந்த வீட்டைக் காலி செய்து விட்டு நாங்கள் செனாய் நகரில் உள்ள புதிய வீட்டில் குடிபுகுந்திருந்தோம்.
காலியாக இருந்த எங்களது பழைய வீட்டிலேயே தான் தங்கிக் கொள்வதாகப் பிரபாகரன் கூறினார். அவருடைய தோழர்கள் பலரும் வந்து தங்க வேண்டியிருப்பதால் இதுதான் வசதியாக இருக்கும் எனக் கூறினார். அவ்வாறே அந்த வீட்டின் மாடியில் உள்ள அறைகள் அவருக்காக ஒதுக்கப்பட்டன.
பிரபாகரன் அங்கு தங்கியிருந்தாலும் கூடப் பெரும்பாலும் எங்களுடைய செனாய் நகர் வீட்டில்தான் அவர் உணவு உண்பது வழக்கமாகும். பெரும்பாலும் அவரது மதிய உணவு, இரவு உணவு ஆகியவை எங்கள் வீட்டில்தான்.
அவருக்கு பாதுகாப்பாக இரண்டு துணை ஆய்வாளர்கள் மூன்று காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவகள் மாறி மாறி 24 மணி நேரமும் அவரைக் கண்காணிப்பார்கள்.
அந்த நாளில் தொலைக்காட்சியில் இலங்கை அரசின் ரூபவாகினி மட்டும் தெரியும். அவர் வந்தால் செய்தி அறிக்கையை மட்டும் பார்ப்பார். வேறு நிகழ்ச்சிகளை அவர் பார்பதில்லை. அவருடன் கிட்டு, இரகு போன்றவர்கள் உடன் வருவார்கள்.
எனது ஒன்றுவிட்ட சகோதரர் திரவியத்தின் வீட்டுக்கும் பிரபாகரன் அடிக்கடிச் சொல்வார். அங்கு அவருக்கு அசைவ விருந்து அளிக்கப்படும்.
பிரபாகரன் காபி,டீ போன்றவற்றை அருந்துவதில்லை.
தோசை,மிளகாய்ப்பொடி அவருக்கு மிகவும் பிடித்த உணவாககும். கொண்டைக்கடலை,சுண்டைக்காய் ஆகியவற்றை அவரும் அவருடைய தோழர்களும் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வார்கள். உடல் வலிமைக்கு அது உதவும் என்பதால்.
இருசக்கர வாகனங்களை ஓட்டமாட்டார்.
பழம்பெரும் காங்கிரஸ்காரரும் எங்களது குடும்ப நண்பருமான வி.கே. வேலுஅம்பலம் அவர்களது வீடு மதுரைக்கு அருகிலுள்ள பூதகுடியில் இருந்தது. இளங்குமரன் தலைமையில் சில புலிகள் அங்குத் தங்கியிருந்தனர்.
எனது தம்பி ஆறுமுகத்தின் மாமனார் ஊரான நெல்லை மாவட்டம் அவினாபுரி வீட்டில் பல புலிகள் தங்கிப் பயிற்சிகளும் பெற்றனர். எனது வகுப்புத் தோழர் சந்திரபால் அவர்கள் வீட்டில் படுகாயம் அடைந்த சீலன் தங்கவைக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டார். சந்திரபாலின் தாயார் தன் மகன் போல் கருதி அவருக்கு பணிவிடை செய்தார்.
மதுரையில் இருந்தபோது அமைச்சர் காளிமுத்து பிரபாகரனுக்குப் பல உதவிகளைச் செய்தார்.
எனது ஒன்றுவிட்ட சகோதரர் பாண்டியன் வீடு உசீலம்பட்டியில் உள்ளது. இந்திய அமைதிபடை இலங்கை செனற காலத்தில் புலிகளின் முக்கியப் பொருட்களையும் ஆவணங்களையும் அந்த வீட்டில் மறைத்து வைத்தோம்.
பிரபாகரன் மதுரையில் இருந்த போது திரைப்படங்களைக் குறிப்பாக ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்ப்பார். பெரும்பாலும் போர் சம்பந்தமான படங்களாக அவை இருக்கும். அவருடன் எனது மகன் இனியன் செல்வான்.
மருத்துவ கல்லூரியில் படித்த ஈழத்தை சேர்ந்த ஞானகுணாளன் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்திரன் ஆகிய மாணவர்களுடன் பிரபாகரனுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. மருத்துவக் கல்லூரி விடுதிக்கு அடிக்கடி சென்று அவர்களைச் சந்தித்துவிட்டு வருவார். சில நேரங்களில் மருத்துவக் கல்லூரி விடுதியிலேயே உணவு உண்பதும் உண்டு.
எனது தந்தையார் அறநெறி அண்ணல் கி, பழனியப்பனார் அவர்களின் பவழ விழ1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 11,12,13 தேதிகளில் மதுரையில் நடைபெற்றபோது அதில் பிரபாகரன் பங்கெடித்துக் கொண்டார்.அதற்காக பழனிக் கோவிலுக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்ற போது அவரும் வருகை தந்தது எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தது.
பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தந்தையாரின் பவழ விழா 3 நாட்கள் நடந்தது. சிலம்புச் செல்வர் ம.பொ.சி முனைவர் வ.அய்.சுப்பிரமணியம்,குன்றகுடி அடிகளார்,கீ.இராமலிங்கனார்,தமிழண்ணல் ,தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம்-மங்கையர்கரசி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் உட்படத் தமிழகத்து அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.மூன்று நாட்கள் விழாக்களில் பிரபாகரன் கலந்து கொண்டார். அனைவரின் பேச்சுக்களையும் உன்னிப்பாக கேட்டு மகிழ்ந்தார். எனது தந்தையாரை அவர் தாத்தா என அழைப்பது வழக்கம். அவரும் இவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். பவழவிழா நிகழ்ச்சியிலே பிரபாகரன் உற்சாகமாகப் பங்கெடுத்து எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மாறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குத் தென்புறம் குகைக் கோவில் ஒன்று உள்ளது. அதையொட்டி ஒரு காடும் உள்ளது. பிரபாகரனும் அவரது தோழர்களும் அந்தக் காட்டுக்கு சென்றுதான் தங்கள் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது வழக்கம்.
உள்ளூரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம்,ஜெயப்பிரகாசம்,தமிழ்க்கூத்தன் போன்ற எங்கள் இயக்கத் தோழர்கள் புலிகளுக்கு உறுதுணையாகச் செயல்பட்டார்கள். அப்போது நான் மதுரை மத்தியத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். என்னைக் காணப் பலரும் தினமும் வந்து செல்வார்கள். அவர்கள் என்னிடம் விவாதிப்பதையெல்லாம் அருகேயிருந்து கவனிப்பாரே தவிர குறுக்கிட்டு எதுவும் பேசும் பழக்கம் பிரபாகரனிடம் இல்லை. பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் என்னைச் சந்திக்க வரும்போதும் அமைதியாக அவரகள் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருப்பார். அவர்களெல்லாம் சென்றபிறகு என்னிடம் தமது சந்தேகங்களையும் கருத்துக்களையும் கூறுவது வழக்கம். இருவரும் தனிமையில் பேசும்போது ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டோம். தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் பிரபாகரன் நன்கு தெரிந்துகொள்ள வாய்ப்பும் கிடைத்தது.
இயக்கம் வளர்ச்சியடையாத காலக் கட்டத்தில் புலிகளுக்குப் பணநெருக்கடி இருந்தது.அப்போதெல்லாம் எனது இளைய தம்பி பழ.ஆறுமுகவேலு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார். அவரிடம் பிரபாகரனுக்கு மிகுந்த நெருக்கமும் நட்பும் இருந்த காரணத்தினால் உரிமையுடன் கேட்டுப் பெற்றுக்கொள்வார். தன்னிடம் சேர்கிற நிதியை ஆறுமுகத்திடம் கொடுத்து வேண்டும்போது பிரபாகரன் வாங்கிக்கொள்வார்.
நான் ஊரில் இல்லாவிட்டாலும் எனது இல்லத்திற்குப் பிரபாகரனும் மற்றத் தோழர்களும் சென்று என் இல்லத்தரசி பார்வதியிடம் உரிமையாகப் பேசி, தங்களுக்கு தேவையான உணவைச் சமைக்கச் சொல்லி விருந்துண்டு செல்வது வழக்கம். நாங்கள் சைவ உணவு உண்பவர்கள். பிரபாகரன் அசைவ அசைவ உணவை மிக விருப்பிச் சாப்பிடுபவராக இருந்தாலும் எங்கள் வீட்டு சைவ உணவை மிக விரும்பி உண்பார். கிட்டு,இளங்குமரன்,ரகு,புலேந்திரன் போன்ற பலரும் எனது மனைவியை அண்ணி என உரிமையுடன் அழைத்து விருந்துண்டு செல்வார்கள். எனது மகள் உமா அப்போது சிறுமி. அவளிடம் பிரபாகரனுக்கு மிகுந்த அன்பு உண்டு.அவளும் மாமா என அழைத்து அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தாள்.
என் பிள்ளைகளான குமணன்,இனியன், என் தம்பியின் பிள்ளைகளான குமரன்,சுப்பு ஆகியோர் பிரபாகரனிடமும் மற்றத் தோழர்களிடமும் நெருங்கிப் பழகினார்கள்.அவர்களுக்குத் தேவையான சிறுசிறு உதவிகளையெல்லாம் விருப்பமுடன் செய்தார்கள்.
அந்தச் சில மாதங்களில் பிரபாகரன் அவர்களைப் பற்றியும், அவரது இயக்கத்தைப் பற்றியும் நிறையவே நான் அறிந்துகொண்டேன்.
இயக்க முக்கியத் தோழர்களான ரகு,சீலன்,புலேந்திரன்,அன்றன்,மாத்தியா,தங்கவேலாயுதம்,இளங்குமரன்,செல்லக்கிளி,ரஞ்சன் ஆகியோர் மதுரையில் பிரபாகரனுடன் இருந்தார்கள். எத்தனையோ நாட்கள் மணிக்கணக்கில் நாங்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம்.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், விடுதலைபுலிகள் இயக்கத்திற்குமிடையே நட்புறவு இருக்க வேண்டும் என்பதற்காக நான் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டேன். 1982-ஆம் ஆண்டு ஆகஸ்டு 11-ஆம் தேதியன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதுரைக்கு வந்தார். அப்போது அவரையும் சந்திக்க வைத்துப் பேசவைத்தேன். ஒரு சுமுகமான சூழ்நிலை உருவயிற்று.
[பாக்ஸ் மாமனின் அன்புப் பரிசு]
சிறு குழந்தையாக இருந்த என் மகள் உமாமீது பிரபாகரனுக்கு அளவுகடந்த அன்பு இருந்தது. அவருக்கு மட்டுமல்ல கிட்டு, இளங்குமரன், பொட்டு, ரகு ,புலேந்திரன் ஆகியோருக்கும் அவளிடம் அன்பு செலுத்தினர். களத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக மதுரைக்குக் கொண்டுவரப்பட்டு எங்கள் வீட்டில் தங்கியிருந்த ஜோனிக்கு என் தம்பி மகன்கள் குமரனும் சுப்புவும் அனைத்து உதவிகளையும் செய்தார்கள். குழந்தை உமாவைப் பார்ததாலே ஜோனிக்கு தனது வலி மறந்து போய்விடும் பிரபாகரன் பெற்றோர் வேலுப்பிள்ளை-பார்வதி அம்மையார்,பிரபாகரன் மனைவி மதிவதனி,அண்ணன் மனோகரன் குடும்பத்தினர் ஆகியோர் அனைவருமே உமாவிடம் அன்பு செலுத்தினர்.
1990-ஆம் ஆண்டில் நான் ஈழம் சென்ற திரும்பியபோது எங்களைக் கொழும்பு வரை வந்து வழியனுப்ப நடேசனை என்னுடன் பிரபாகரன் அனுப்பி வைத்தார். புறப்படுவதற்கு முன் நடேசனிடம் இரகசியமாக ஏதோ பிரபாகரன் கூறினார். நானும் அதை என்ன என்று கேட்கவில்லை. கொழும்பு வந்தவுடன்தான் அந்த ரகசியம் உடைபட்டது.
(அடுத்த வாரம் சந்திப்போம்…)