கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்தையா சுவாமி மற்றும் பச்சையம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த ஜூன் 29-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து பல்வேறு கால யாக பூஜைகள் நடைபெற்றன.

இறுதிக்கட்டமாக ஞாயிற்றுக்கிழமை காலை ஆறாம் கால யாக பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 9.50 மணியளவில் ராஜகோபுரம், முத்தையா சுவாமி, பச்சையம்மன் சன்னதிகள் மற்றும் கொடிமரம் ஆகியவற்றின் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை, பரம்பரை அறங்காவலர்கள், கலைச்செல்வம், செல்வம், வாழப்பாடி கலைமணி ராமமூர்த்தி, பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி, புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன், சோழன் குமார் வாண்டையார், உபயதாரர்கள், குலதெய்வ பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனர்.

[youtube-feed feed=1]