தமிழ்நாட்டின் ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஐபோன் உதிரிப்பாக தொழிற்சாலையால் அருகிலுள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) குற்றம் சாட்டியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான பின்புற பேனல்கள் மற்றும் பிற உதிரிப்பாகங்களை தயாரிக்கும் இந்த தொழிற்சாலைக்கு எதிராக வந்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த 2025 டிசம்பர் முதல் 2026 மே மாதம் வரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஐந்து முறை ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது, தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர் மழைநீர் சேகரிப்பு குளத்தில் விடப்பட்டதாகவும், பின்னர் அந்தக் குளம் நிரம்பி வழிந்ததால் அருகிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள திறந்த கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து டாடா நிறுவனத்திற்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், திருப்திகரமான பதில் அளிக்கப்படாவிட்டால் தொழிற்சாலையின் செயல்பாட்டை நிறுத்தும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் வாரியம் எச்சரித்துள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தின் மூலம் தன்னிச்சையாக மேற்கொண்ட பரிசோதனையில், தொழிற்சாலை அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் முறையாக பின்பற்றுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]