செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியை தற்காலிகமாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எதிர்காலத்தில் உருவாகலாம் என AI நிறுவனமான Anthropic தெரிவித்துள்ளது.

அந்நிறுவனம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், தனது Claude என்ற AI அமைப்பு தற்போது புதிய AI தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது. இந்தப் போக்கு தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஒரு AI அமைப்பு தானாகவே அடுத்த தலைமுறை AI அமைப்புகளை வடிவமைத்து உருவாக்கும் நிலை உருவாகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

ஆனால், அந்த நிலை தற்போது வரவில்லை என்றும், அது கட்டாயமாக நிகழும் என்பதற்கும் எந்த உறுதியும் இல்லை என்றும் Anthropic விளக்கியுள்ளது. இருப்பினும், அத்தகைய சாத்தியக்கூறுகளுக்காக அரசுகள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் சமூகம் இப்போதே தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் AI வளர்ச்சி வேகம் கணிசமாக அதிகரித்துள்ளதாக Anthropic கூறுகிறது. ஆரம்பத்தில் மென்பொருள் பொறியாளர்கள் அனைத்து நிரல்களையும் தாங்களே எழுதினர். பின்னர் AI அரட்டையாடல் கருவிகள் சிறிய நிரலாக்க உதவிகளை வழங்கத் தொடங்கின. அதன்பிறகு கோப்புகளை தானாக உருவாக்கி திருத்தக்கூடிய AI முகவர்கள் (AI Agents) உருவாகினர். தற்போது சில AI அமைப்புகள் தாங்களாகவே பணிகளை மேற்கொண்டு, மற்ற AI முகவர்களுக்கும் வேலைகளை ஒப்படைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Anthropic வெளியிட்ட தகவலின்படி, 2024-ஆம் ஆண்டு Claude Opus 3 மனிதர்கள் சுமார் 4 நிமிடங்களில் முடிக்கும் மென்பொருள் பணிகளை மட்டுமே கையாள முடிந்தது. ஒரு ஆண்டுக்குப் பிறகு வந்த Claude Sonnet 3.7 சுமார் 90 நிமிடங்கள் எடுக்கும் பணிகளைச் செய்யும் திறன் பெற்றது. 2026-இல் அறிமுகமான Claude Opus 4.6, மனிதர்களுக்கு சுமார் 12 மணி நேரம் தேவைப்படும் பணிகளையும் மேற்கொள்ளும் அளவுக்கு முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது Anthropic நிறுவனத்தின் AI அமைப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படும் பெரும்பாலான நிரல் குறியீடுகளையும் Claude தான் எழுதுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஒரு பொறியாளர் தினசரி உருவாக்கும் நிரல் குறியீட்டின் அளவு 2024-ஐ ஒப்பிடும்போது எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

நிரலாக்கம் மட்டுமல்லாமல், ஆராய்ச்சிப் பணிகளிலும் Claude கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளதாக Anthropic தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் உள்நாட்டு ஆய்வு ஒன்றில், முக்கியமான ஆராய்ச்சி சவாலை Claude சார்ந்த AI முகவர்கள் பெரும்பாலும் வெற்றிகரமாகத் தீர்த்ததாக கூறப்படுகிறது.

எதிர்காலத்தைப் பொறுத்தவரை, AI வளர்ச்சி வேகம் குறையலாம், மனிதர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து பெரிய உற்பத்தித் திறன் வளர்ச்சியை ஏற்படுத்தலாம் அல்லது AI அமைப்புகள் தங்களுக்குப் பின் வரும் AI அமைப்புகளைத் தாங்களே உருவாக்கும் நிலை உருவாகலாம் என மூன்று சாத்தியமான நிலைகளை Anthropic முன்வைத்துள்ளது. இதில் மனிதர்கள் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொண்டு AI தொடர்ந்து வளர்ச்சி அடையும் இரண்டாவது நிலையே தற்போது அதிக சாத்தியம் கொண்டதாக நிறுவனம் கருதுகிறது.

அதே நேரத்தில், AI அமைப்புகள் வேகமாக முன்னேறினாலும், பெரிய அளவிலான திட்டமிடல், முக்கிய முடிவுகள் எடுப்பது மற்றும் எந்த பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது போன்ற துறைகளில் மனிதர்களுக்கு இன்னும் முன்னிலை இருப்பதாக Anthropic கூறியுள்ளது.

எனினும், AI வளர்ச்சியை கண்காணித்து பாதுகாப்பாக வழிநடத்துவது நாளுக்கு நாள் சவாலாக மாறி வருவதாகவும், AI வளர்ச்சி மனித சமூகம் பாதுகாப்பாக கையாள முடியாத வேகத்தை எட்டினால், உலக நாடுகளும் முன்னணி AI நிறுவனங்களும் இணைந்து அதிநவீன AI மாதிரிகளின் வளர்ச்சியை தற்காலிகமாக மந்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்றும் Anthropic எச்சரித்துள்ளது.

[youtube-feed feed=1]