தாத்தாவின் சொத்தைப் பாகப்பிரிவினை மூலம் தந்தை பெற்றிருந்தால், அந்தச் சொத்தில் பேரனுக்குப் பிறப்புரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி தந்தைக்குக் கிடைத்த சொத்து அவரது தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது தந்தை, தாத்தாவின் சொத்துப் பாகப்பிரிவினையில் பெற்ற நிலத்தில் தனக்குப் பாதி பங்கு வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ், சுனிதா அகர்வால் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

வழக்கின் பின்னணி

சென்னையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் சொத்துகளைப் பிரிப்பது தொடர்பாக அவரது மகள் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, 1994-ம் ஆண்டு ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தின் அடிப்படையில் சொத்துகள் வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இதில் ராமகிருஷ்ணனின் மகனான முதல் எதிர்மனுதாரருக்கு குறிப்பிட்ட நிலம் ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே, 1994-ம் ஆண்டில் பிறந்த அவரது மகன், தனக்கும் அந்த நிலத்தில் பங்கு இருப்பதாகக் கூறி 1997-ம் ஆண்டு தனது தாயின் மூலம் வழக்கு தொடர்ந்தார். தாத்தாவின் பூர்வீகச் சொத்தில் தந்தைக்குக் கிடைத்த பங்கில் தனக்கும் பாதி உரிமை உண்டு என்று அவர் கோரினார்.

ஆனால், அந்த நிலத்தை தந்தை ஏற்கெனவே மற்ற இருவருக்கு விற்பனை செய்திருந்தார். இதனால் சொத்தை வாங்கியவர்களும் வழக்கில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் முதலில் பேரனுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. ஆனால், மேல்முறையீட்டில் அந்தத் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும், தந்தைக்குச் சொத்து கிடைத்தது பாகப்பிரிவினை மூலமே என்பதால், அதில் மகனுக்குப் பிறப்புரிமை கிடையாது என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் விளக்கம்

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956-ன் பிரிவு 8-ன்படி, ஒருவர் உயில் எழுதாமல் இறந்தால் அவரது சொத்துகள் முதல் வகுப்பு வாரிசுகளுக்குச் சென்றடையும் என்று குறிப்பிட்டது.

அவ்வாறு தாத்தாவின் சொத்துகள் அவரது முதல் வகுப்பு வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட பிறகு, ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட சொத்து அவரவர் தனிப்பட்ட சொத்தாக மாறிவிடும். அந்தச் சொத்தில் அவர்களது பிள்ளைகளுக்குப் பிறப்பின் அடிப்படையில் தானாக உரிமை உருவாகாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், தாத்தா இறந்தபோது பேரன் பிறந்திருக்கவில்லை. சொத்துப் பாகப்பிரிவினையும் பேரன் பிறப்பதற்கு முன்பே நடைபெற்றுள்ளது. எனவே, தந்தைக்குக் கிடைத்த சொத்தில் பேரன் பிறப்புரிமை கோர முடியாது என்றும் கூறினர்.

தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தத்தின் 29A பிரிவும் இந்த வழக்கிற்குப் பொருந்தாது என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை எனக் கூறி மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.